பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     அரசாங்கம்

     அரசாங்கம் என்னவென வினவுகின்றாய்
     ஆட்சியாளர்வழியை விளக்குகின்றேன்;
     அரசாங்கம் சுரைக்குடுவை; ஆளுவோரால்
     அதிகாரச் சட்டத்தால் உருளும் ஓடும்.

     ஆட்சியின்கீழ் இருப்போரும் துயில்கின்றாரும்
     அல்லலுற்று விழித்தெழுந்தால் ஆளவந்தார்
     சூழ்ச்சியினால் அறியாமை தனைப்புகட்டும்
     சுரைக்குடுவை தலைநிமிர்ந்து சுழலும் பாடும்.

     மிதியுண்டோர், சுரண்டப்பட்டு அடியுண்டோர்கள்
     மெத்தனமாய் என்றுமே உறங்கல் இல்லை.
     கொதித்தெழும் ஓர் எரிமலையாய் வெடிப்புற்றார்ப்பார்
     கோளரிமுன் நரியாவார் ஆளவந்தார்.

     உண்மைசேர் ஆட்சியும் நாடும் எல்லாம்
     உயர்ந்த பெருங்கடவுட்கே உரியதாகும்,
     உண்மையிலே ஆள்பவனும் அவனே ஆவான்
     உளயாவும் அறியாமை, அடிமையாகும்.

     உமக்களித்த உரிமையினை மாந்தரேநீர்
     உயிர்வாழ விற்று அடிமை ஆகிடாதீர்,
     சுமக்கின்ற சிலைகளினால் மேலும் மேலும்
     குருமாரைத் தோற்றுவித்துத் துன்புறாதீா்.

     மேல்நாட்டின் குடியரசு புதியதன்று,
     வியப்பிற்கும் அடிமைக்கும் தாலாட்டல்போல்
     கால்ஊன்றி நின்றபழங் கள்ளே யாகும்,
     கடுங்கோன்மைக் குரியபுதுப் பெயரே ஆகும்.

110