இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
என்னுடைய பாட்டு
இளமையும் அன்பும்
இணைந்தினிக்கும்; நெஞ்சில்
வளமையும் வன்மையும்
சேர்க்கும்; கிளர்ந்தெழுச்சி
ஊட்டும்; உணர்ச்சியால்
உள்ளத்தை வான்ஏற்றும்
பாட்டா; என்னுடைய
பாட்டு!
அன்பினைப் பாடும் என்
பாடல்களை உண்டெறியும்
என்பினைப்போல் விட்டெறிதல்
ஏன்? அவற்றுள் தென்புடைய
பேரறிஞர் தன்மையினைப்
பேரறிஞர் பீடதனை
ஓரணியாய்க் காண்பீர்
உவந்து!
21