பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     பரிதியும் கதிரும்

     ஒருநாள் பரிதி தன்ஒளிக் கதிர்களைத்
     திரும்பவும் தன்னிடம் வருகவென் றழைத்தது;
     நிலவுல கதற்குப் பொருந்தாதென்றது;
     பகலும் இரவுப் பொழுதுகள் அனைத்தும்
     வஞ்ச மனத்தின் வடிகால் என்றது;
     ஒளியினை வெளிப்படச் செய்வதால் இன்பக்
     களிப்பிலை என்று கழறிய கணத்துள்,
     உலகினில் மூலை முடுக்கினில் ஒளிர்ந்த
     இலகொளி அனைத்தும் இரவியின் மடிக்குள்
     வந்து புகுந்தன, ஒடுங்கின; மற்றவை
     புடவியின் கொடுமையை எடுத்தியம்பின.
     ஆனால்,
     அழகிய ஒரு கதிர்க் கற்றை
     நிலத்திலிருந்து திரும்பிட மறுத்தது;
     நிலத்தின் இருட்டில் நின்றே ஒளிவிட
     ஒப்புதல் வேண்டி உரிமை கேட்டது.
     இந்திய நாட்டின் அருமை பெருமையைச்
     சந்தத் துடனே தென்பாங்கிசைத்தது.
     பெரும்பணி பலவுள என்று பேசிற்று.
     கோயிலின் வாயிலில் அந்தணன் உறங்குவான்,
     மசூதியின் மடியில் மண்டி இட்டு
     முசுலிம் பெருங்குரல் முழக்கம் இடுகிறான்,
     ஏசு மதத்தினன் பேசுவான். ஏசுவான்.
     உலகம் அனைத்தையும் விழிப்புறச் செய்வதும்
     இருட்டினை விலக்கி ஒளிபெறச் செய்வதும்
     என்னுடைக் கடனே, எனக்கிட்ட ஆணையே.

58