பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     எஞ்சி நிற்பவை

     உலகில் பொதுமை நிலைபெறல் ஒன்றும்
     மாந்தருள் ஒற்றுமை ஓங்குதல் ஒன்றும்
     வலுவுற வில்லையேல் மலராதுலகே!

     நாடு, மொழி, இனம் கேடுசெய் பொருள் இவை
     ஊடு புகாத உண்மையும் அன்பும்
     சிதைந்ததால் அனைத்தும் சிதைந்து நிற்கின்றன.

     உடன்பிறப் பாண்மையின் கடைக்கால் தகர்ந்தது,
     குறுகிய தேசியம் வெறிகொண்டெழுந்தது;
     நாடுகள் ஆங்கதன் நச்சுவாய்ப் பட்டன.

     மாந்த இனமெலாம் ஏந்துபோர்க் கூட்டமாய்ப்
     பதறியும் சிதறியும் பாழாய்ப் போயின.
     மக்கள் இனக்கதை சிக்கல் மிகுந்த
     தொல்பழங் கதையால் தொல்லையுற்றது.

     ஒருவர்க் கொருவர் வேற்றார் ஆயினர்,
     உள்ளுணர் வனைத்தும் ஓடிப் போயின
     வெளிப்பொலிவு ஒன்றே எஞ்சி நின்றது.

     யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று
     ஓதும் ஒருமொழி ஒழிந்தே விட்டது.
     ஈற்றில் எஞ்சி நாற்புறத்துள்ளவை
     வேற்றுமைப் பட்ட தேசிய இனங்களே.

60