பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     விடிவெள்ளி

     எண்ணும் எண்ணம்போல் மாறும் ஆற்றல்கள்
     என்னிடத்திலே வாழ்ந்திடில்
     விண்ணில் மின்னியே கண்சிமிட்டிடும்
     வெண்பொன் ஆகநான் வாழ்ந்திடேன்,
     மண்ணைச் சூழ்ந்திடும் மாக்கடல் மடி
     மலரும் முத்தென மின்னுவேன்.

     இன்பமே மிகும் இந்த மண்ணினில்
     இனியதோர் மலராக நான்
     அன்பனே உருக்கொள்ளுவேன் எனில்
     அம்மலர் இதழ்க் கடையினில்
     நன்பனித்துளி முத்தமாகவே
     நான் சிரித்திட வேண்டுவேன்.

     தாயகத்தினைக் காக்கச் சென்றிடும்
     தருக்கு மேவிய வீரனின்
     நேயமிக்குடைக் காதல் நங்கையின்
     நெஞ்சின் பீடுறு நினைவுகள்
     தோயும் வாள்விழித் தளும்பும் புன்கணீர்
     தோற்றம் கொண்டிட வேண்டுவேன்.

     விழுதின் வாலென விண்ணகத்திலே
     கங்குல் வேளையில் வாழ்வதா?
     புழுதியில் கலந்தொன்றும் மக்களின்
     பொன்னுழைப்பினால் வாழுவேன்,
     கொழுந்து விட்டெழும் காதல் தீயதன்
     கொழுமை யாவையும் கூட்டுவேன்.

87