115
கார்கள் போகின்றன; வழியில் பாலங்கள் கட்டப்பட்டு இருந்தால் அதற்குரிய செலவினங்களை ‘செக்போஸ்டில்’ காருக்கு அறுபது பென்சு என்று ஏதோ ஓர் தொகை வசூல் செய்கிறார்கள்; அதற்கு ஓர் ஆள்; எழுதுவதற்கு ஒரு ரசீது இப்படி எல்லாம் இல்லாமல் இருப்பது வியப்பைத் தருகிறது. அங்கே ஒரு பெட்டி (திருப்பதி உண்டி போல) இருக்கிறது. அதில் போட்டால் (அந்தக் குறிப்பிட்ட தொகை) அது எந்தக் காசுகளாவது இருக்கலாம். வழி தானாக விடுகிறது; நம் ஊர் தொலைபேசியில் குறிப்பிட்ட ஐம்பது காசு போட்டால் தான் உள்ளூருக்குள் பேச முடிகிறது ; அங்கே கார்கள் நிற்கும் இடத்தில் காசு போட்டால் அது மீட்டர் காட்டிக் காசுக்கு ஏற்ற நேரத்தைக் காட்டுகிறது, இப்படி அரிய சாதனைகள் மனித முயற்சிகளைக் குறைக்கிறது.
எந்திர வளர்ச்சி மனித உழைப்பைக் குறைக்கிறது; அவரவர் தாமும் இயந்திரங்களைப் போல் ஒழுங்காகத் தம் கடமைகளைச் செய்து முடித்துவிட்டபின் தொலைக்காட்சியும், கிளப்களும் குடும்ப வாழ்க்கையும், குழந்தை வளர்ப்பும், மேஜைமேல் உணவோடு அருந்தப்படும் மதுவகைகளும் மகிழ்வைத் தருகின்றன. அங்கே மக்கள் தொகை கட்டுப்பாடு செய்யப்பட்டு உள்ளது; வாழ்க்கை உறுதி செய்யப்பட்டு உள்ளது; வேலை இல்லை என்று பட்டினி கிடக்கத் தேவை இல்லை; வாழ்க்கைப் பணம் அளிக்கப்படுகிறது. அங்கேயும் ஒருசிலர் ஒப்பியம் கஞ்சா முதலியன பழகிக்கொண்டு அழிகிறவர்களும் உண்டு; இங்கிலாந்து மட்டுமல்ல; பிரான்சு, பெல்ஜியம், ஜெர்மனி இப்படி ஐரோப்பா முழுவதும், அமெரிக்காவிலும் இந்தத் தீமை பரவித் தம்மைத் தாம் அழித்துக் கொள்கிறவர்கள் மிகுதியாகி வருகின்றனர். இது தவிர மற்றைய அவதிகள், கேடுகள், வருவாய் இன்மை , பற்றாக்குறை என்பவை அந்த நாடுகளில் இல்லை.