10
கல்வி பெற்றுவிட்டால் நாம் ஒரு பெரிய சாதனையை அடைந்துவிட்டோம் என்று கூறமுடியாது. எந்த மொழியாவது வளரட்டும்; பரவட்டும். ஆங்கிலத்தை எடுத்து எறியச் செய்யப்படும் முயற்சி நம்மை நாம் பின் தள்ளிக் கொண்டு செல்வதாக முடியும்.
நாம் அறிவு வேகத்தோடு போட்டியிட வேண்டியுள்ளது; கருத்துப் புதுமைகளைக் காணவேண்டியுள்ளது; அதற்கு ஆங்கிலம் அடிப்படை; நாட்டு வட்டார மொழிகள் பொது மக்களோடு அரசியல் வணிகம் அரசாங்க நடவடிக்கைகள் நடைபெற முனையும் முயற்சி வெற்றி பெற்று வருகிறது, இது அண்மைக்காலத்தில் ஏற்பட்ட முற்போக்கு, வளர்ச்சி, வட்டார மொழியில் அனைத்தும் இயங்குவது போற்றத்தக்க வளர்ச்சிதான். மேல் நிலையில் நுட்ப அறிவுக் கலை விஞ்ஞான நுணுக்கங்களை வெளிப்படுத்தும் மொழி ஆங்கிலம். அது ஆங்கிலேயர் நமக்கு விட்டுச் சென்ற அரிய செல்வம் என்பதை உணர முடிகிறது. ஆங்கில அறிவே இல்லாவிட்டால் நாம் அங்கு எதையும் அறிய முடியாது; பேச்சுத் தொடாபே இருக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. மேற்கும் கிழக்கும் இணைக்கும் பாலமாக இந்த ஆங்கில மொழி அமைந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
உலக அரங்கில் நாம்
ஒவ்வொரு தேசமும் நமக்கு ஒரு படிப்பினையைத் தருகிறது. பிரெஞ்சுப் புரட்சி சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோஷத்தைத் தந்தது. மனிதன் சுரண்டப்படக் கூடாது; ஆட்சியாளர்கள் குடிமக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் பறிக்கக்கூடாது. அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டும் என்ற லட்சிய தாகத்தை எழுப்பியது; ஆண்டான் அடிமை நிலை ஒழிய வேண்டும் என்பது அங்கு எழுந்த புரட்சியின் வேகம்.