பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121

வற்புறுத்தினார்; சமுதாயச் சீர்திருத்தமாகத் தீண்டாமை ஒழிப்பு, தனி மனிதன் ஒழுக்கச் சீரமைப்பாக மதுவிலக்குக் கொண்டுவர வழி கோலினார்.

உண்மையிலேயே நம் நாட்டில் குடி மக்கள் வாழ்வைச் சீர்குலைக்கத்தான் செய்கிறது. அதற்குக் காரணம் அதற்குச் செலவு செய்யத் தேவையான பொருள் இன்மை; அதற்கு அரசாங்கம் விதிக்கும் வரிச்சுமை, ஏலம் விடுகிறார்கள். யார் அதிகம் தொகை தருகிறார்களோ அவர்களுக்கு விற்பனை விநியோக உரிமைகள் கிடைக்கின்றன. இன்னும் அவர்கள் யார் யாருக்கோ கொடுக்க வேண்டும் என்று பேசிக்கொள்கிறார்கள். இதில் ஏராளமான வருவாய் ஆட்சிக்கு வருகிறது என்று பேசப்படுகிறது; மதுவிலக்கால் கிடைக்கும் பணத்தைக் கொண்டு சத்துணவுத் திட்டங்கள் செயல்படுகின்றன; பள்ளிகளுக்கு நிதிப்பணம் கிடைக்கிறது. தீய வழியில் கிடைக்கும் நிதி நல்லனவற்றிற்குப் பயன்படுகிறது. குடிப்பழக்கத்தால் பிள்ளைகளுக்குச் சோறு போடமுடியவில்லை பெற்றோர்களால்; அவர்கள் தரும் வரிப்பணத்தைக் கொண்டு அரசாங்கம் அவர்களுக்குச் சோறு தருகிறது. வறுமைக்கு முக்கியமான காரணம் குடிப்பழக்கம் என்பது மறுக்க முடியாத சூழ்நிலை. அது மட்டும் அல்ல; இந்தத் துறையில் கலப்படம் அதிகம் ஆகிறது; குடிப்பழக்கத்தினர் உடம்பை அது மிகவும் பாதிக்கிறது. மதுவிலக்கை எடுத்தால் ஆட்சிக்கு வருவாய்; அதைப் புகுத்தினால் அதிகாரிகளுக்கு வருவாய்; கள்ளச் சாராயம் குடிசைத் தொழிலாக வளர்கிறது. ‘கலங்கல்’ என்ற ஒரு தனிப் படைப்பும் பலர் உயிரைப் பருகுகின்றது, இதைப் போன்ற பிரச்சனைகள் மேல்நாடுகளில் இல்லை; ‘குடிப்பது தீமை’ என்னும் திருக்குறளை அவர்கள் படிப்பது இல்லை; உயர்ந்த குடிவகைகள் நியாயமான விலைகளுக்குக் கிடைக்கின்றன. குடிப்பவன் குற்றம் செய்பவனாகக் கருதப்படுவதில்லை.