24
என்ற அந்த அமைப்பு முறையை அங்குக் காணமுடியாது, நகரங்களில் இட நெருக்கடி காரணமாக இங்கு அந்த அமைப்புகள் இடம்பெற்று இருக்கின்றன. ஆளுக்கு ஒரு வீடு; அவர்களுக்கு ஒரு குடும்பம். அங்கு எல்லா வசதிகளும் இடம் பெறுகின்றன. தொலைக்காட்சிகள், தொலைபேசிகள், வீட்டு முன்னால் அவர்கள் பயன்படுத்தும் கார்கள் இவை சராசரி வாழ்க்கையுடையவர்களின் வசதிகள். வீட்டிலே தொலைக்காட்சிகள் ஒரே நிலையத்திலிருந்து வருவதில்லை, பல நிலையங்கள் ஒளிபரப்புகின்றன. காலை முதல் இரவு வரை தொடர்ந்து செயல்படுகின்றன. திரை அரங்குகள் மிகமிகக் குறைவு; அருகிவிட்டன.
உண்பது, உடுத்துவது, உறங்குவது இந்த மூன்றையும் திருத்தமுறச் செய்வது அவர்கள் நாகரிகம்; பழக்கம்; வாழ்க்கைமுறை. உணவு அருந்துதல் ‘வட்டமேஜை’ மாநாடு கூட்டப்படுகிறது. நடுவில் மேஜை உணவுப் பொருள்கள் மேலே தனித்தனிக் கிண்ணங்களில் கொண்டு வந்து வைக்கப்படுகின்றன. எது வேண்டுமோ அதை நாமே பறிமாறிக்கொள்கிறோம். உண்ணும்போது மேஜைமேல் ஒரு பருக்கையும் சிதறக்கூடாது; கைகள் அவற்றின் சுவையைப் பருகக்கூடாது, கரண்டிகள், கத்திகள் தட்டுமுட்டுச் சாமான்கள் அத்தனையும் போர்க்களக் கருவிகள் ஆகின்றன. என்றால் அவர்கள் அடித்துப் பிடித்துக்கொள்கின்றனர் என்பதல்ல பொருள்; இறைச்சி, மீன், கோழி, புலவு இந்த அசைவ உணவுகளுக்கு அவை பெரிதும் தேவைப்படுகின்றன.
இலையில் போட்டுக்கொண்டு தரையில் மணை இட்டு ஆர அமரக் கரங்களுக்கு வேலை தருவது நம் நாட்டுப் பழக்கம்; ‘மூட நெய் பெய்து முழங்கை வழி வார’ உண்ணல் சுவைப்பாடல்; ஆண்டாள் திருப்பாவையில் இடம் பெறுகிறது. மேல்நாட்டு முறை நடுத்தர மக்களின் இல்லங்களிலும் இப்பொழுது அரை குறையாக இடம் பெற்-