27
அவர்களுக்கு எத்தனை படுக்கை அறைகள் தேவைப்படுகின்றன என்பதை ஒட்டி அவர்கள் வீடுகளைத் தேடிக் கொள்கிறார்கள். மணமான ஆரம்பத்தில் தனக்கும் தன் துணைவிக்கும் எனச் சிறு வீடு எடுத்துக் கொள்கிறார்கள். அல்லது விலைக்கு வாங்குகிறார்கள். வீடு வாங்கக் கடன் வசதிகள் நிறையக் கிடைக்கின்றன. குடும்பம் பெருகுகிறது. படுக்கை அறைகள் விரிவு அடைகின்றன. வீடுகளை மாற்றிக் கொள்கிறார்கள். தம் பிள்ளைகள் வயது வந்ததும் பறக்கும் பறவைகளாக, அந்தக் கூடுகளை விட்டுச் செல்கின்றனர். மறுபடியும் அவர்கள் இருவராகக் குறைகின்றனர். வீடும் சிறிதாகிவிடுகிறது. தேவைக்கேற்ப வீட்டின் பெருமையும் சிறுமையும் அமைகின்றன. வீடு இல்லாத குடும்பமே இல்லை; நடைவாசிகள் தெருவாசிகள் இந்த அவல நிலைகளை அந்தத் தேசங்கள் எங்கும் காணமுடியாது.
அழகுக்கும் கற்பனைக்கும் முதலிடம்
‘கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ ‘சுத்தம் சோறு போடும் இந்தப் பழமொழிகள் நாம் நம் வீட்டையும் நம்மையும் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையை உணர்த்துகின்றன. அங்கே குளிக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்படுவதில்லை; வியர்வையே காணமுடிவதில்லை; துணிகளும் அழுக்காவது இல்லை; ஏன் வியர்வை வந்தால் தானே துணி அழுக்குப்படிகிறது, மற்றும் சுற்றும் தூசுகள் எழுவதில்லை. அதனால் துணிகள் மாசுகள் படிவதில்லை; துணிகள் துவைக்க அதற்கு வேண்டிய மின்சார சாதனங்கள் பொருத்தப்படுகின்றன. அவை துவைத்து ஆரவைக்கின்றன. கசக்கிய உ.டைகளைப் படியவைத்துப் பெட்டி போட்டுத்தான் உடுத்திக்கொள்கிறார்கள். படிப்புக் கலையாத உடை உடுத்துவது மற்றவர்களை மகிழவைக்க என்பது அடிப்படை; வீட்டில் எப்படி இருந்தாலும் கவலை இல்லை.