பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

கூட அவர் ஒரு தொழில் நிபுணராகவே மதிக்கப்படுகிறார். வைத்தியர்; இன்ஞ்சினியர் போன்றே அவரும் மதிக்கப்படுகின்றார். அவரவர் குறித்த நேரத்தில் வந்து மணிக்கணக்கில் வேலை செய்து தமக்குச் சேரவேண்டியதைப் பெற்றுச் செல்கின்றனர். வீடுகளைச் சொந்தக்காரர்களே தம் உழைப்பைக் கொண்டு கட்டிக்கொள்ளவும் செய்கின்றனர். அந்த அந்தத் தொழில் எப்படிச் செய்வது என்பது குறித்துப் புத்தகங்கள் அவர்களுக்கு வழிகாட்டுகின்றன. அது ஒரு விருப்பப் பொழுதுபோக்குத் தொழிலாக மேற்கொண்டு அவரவர்கள் அவரவர் வீட்டையும் கட்டிக் கொள்கின்றனர். வீட்டுக்கு வெள்ளையடித்தல், நிறம் தீட்டுதல் இவற்றிற்கு மற்றவர்களை எதிர்பார்ப்பது இல்லை.

கடிகாரம் தவறு செய்தாலும் வேலைக்காரிகள் நேரம் தவறுவது இல்லை; நேரம் தவறாமை என்பது அங்கு ஒரு நல்ல பழக்கமாக இருக்கிறது. எந்தத் தொழிலாளியும் ‘இந்த நேரத்திற்கு வருகிறேன்’ என்றால் அவன் கட்டாயம் வந்து தீருவான். எதிர்பாராமல் எந்த விருந்தாளியும் வீட்டுக்கு வருவதும் இல்லை; முன்கூட்டித் தொலைபேசியில் அறிவித்து விட்டு ஒப்புதல் பெற்றுக்கொண்ட பிறகே வீட்டுக்குள் நுழைவார்கள். ‘சும்மா வந்தேன் ; இந்தப் பக்கம் வந்து உங்களையும் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன் என்று சுற்றி வளைத்துப் பேசும் பழக்கங்கள் இல்லை.

விருந்தினர் வருவது என்றால் முன்கூட்டிச் சொன்னால்தானே அவர்களை வரவேற்க முடியும். சிற்றுண்டியோ உணவோ தர முடியும். விருந்தினர் தக்கபடி வரவேற்கப் பட்டு உணவு தந்து பின் அளவளாவுதல் அங்கு ஒரு நல்ல பழக்கமாகக் காணப்படுகிறது. காலையில் ஒன்பது மணி என்றால் சரியாக அந்த நேரத்துக்கு வந்து வேலைக்காரி கதவைத் தட்டுவாள். கடிகாரம்