பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

பஸ்களும் அங்கு நிற்கின்றன. ஹோட்டல்கள், கடைகள், கழிப்பிடங்கள் கூடிய அந்த வளாகம் ஓய்வு அகங்களாக விளங்குகின்றன.

கட்டணக் கழிப்பு அறைகள் இங்குப் புகுத்தப்பட்டு வருகின்றன; அங்கே ஆங்காங்கே நடைமுறையில் உள்ளன. காசு கொடுத்தே கடன் கழிக்க முடியும். இலவச இடங்களும் உள்ளன. ‘கட்டணக் கழிப்பு முறை’ பொறுப்பு மிக்க இடமாக மாறுகிறது. அதைக் கண்காணிக்க எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ள ஆட்கள் பணி செய்கின்றனர். உணவு அகங்கள் வழிப் பயணிகளுக்கு எவ்வளவு தேவையோ அதைப்போலக் கழிப்பிடங்களும் ஒழுங்காக அமைக்கப்படுதலும் அவசியம் ஆகிறது.

அந்த வளாகத்தில் காசு போட்டு விளையாடும் விளையாட்டுக் கருவிகளும் உள்ளன. அதில் சிறிது நேரம் காசு வைத்துச் சூதாடி அவரவர் அதிருஷ்டத்தையும் கண்டு மகிழ முடிகிறது.

இந்தப் புறத்தூய்மை பற்றி வெளிநாட்டுப் பயணிகள் ஒவ்வொருவரும் குறிப்பிடுகின்றனர், கடுமையான நடவடிக்கைகள் குறித்தும் பாராட்டிப் பேசுகின்றனர். நம் நாட்டில் இந்தச் சூழ்நிலையை உண்டாக்க முடியுமா? இதற்கெல்லாம் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியுமா? முடியாது.

எந்தச் சட்டம் போட்டாலும் அதிகாரிகள் மக்கள் மீது பாய்கிறார்கள். நம் நாட்டில் தொழிலாளர்க்கு நன்மை செய்ய அங்காடி விதி முறைகள் (Shop Act) போட்டு இருக்கிறார்கள். நன்மைக்கு மாறாகத் தொல்லைகள்தாம் மிகுதி. கோர்ட்டில் நிறைய வழக்குகள் தொடுக்கப் படுகின்றன. நிறுவனங்கள் அலைக்கழிக்கப் படுகின்றன.