பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் ‘எக்சர்ஷன்’ செல்கின்றனர். வளர்ந்தவர்கள் அதை ‘பிக்னிக்’ என்று எடுத்துச் சொல்கின்றனர். வசதி மிக்கவர்கள் ‘உல்லாசப் பயணம்’ என்று பெருமைப்படுத்துகின்றனர். வயதானவர்கள் ‘யாத்திரை’ போகின்றனர். இப்படி ஏதோ சில பெயர்களால் மற்றை நாடுகளுக்கும் இடங்களுக்கும் போய்வந்த பிறகு அவர்கள் விசாரணைக்கு உள்ளாகின்றனர்.

“எப்படி இருந்தது பயணம்?” --கேட்கப்படும் வினா. இது சம்பிரதாயத்தை ஒட்டியது; பதில் சொல்லும்வரை கேட்பவர் முன் இருப்பது இல்லை; சலிப்பைத் தாங்காமல் அவர்கள் செய்த தவறை உணர்ந்து மறுபடியும் யாரையும் இது போன்று விசாரிப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்து விடுவார்கள்.

இதே போன்ற கேள்விகள் எனக்கும் தரப்பட்டன, பதில் சொல்வது என்பது எளிது அல்ல; அவர்கள் கேட்பது சம்பிரதாயம்தான் என்பதையும் உணர்கிறேன். அந்த வினாக்கள் ஒன்று சேர்ந்து என்னை எழுதத் தூண்டின.

கேட்பவர்கள் படிக்கப்போவது இல்லை; படிப்பது உறுதி இல்லை. மற்றவர்கள் படிக்கவே இது எழுதப்பட்டது. எழுதுகிறேன். ஏன் எழுதுகிறேன். எழுத்து எனக்குப் பழக்கமான கலை; அது இதனை ஒரு இலக்கிய வடிவம் ஆக்கித் தந்துள்ளது.