உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

உயர்ந்த கார்கள் உற்பத்தி மிகுதியாக உள்ளது. நிலக்கரி யும் இரும்பும் இயற்கை வளமும் மிக்க நாடு அதனால் அது தொழில் வளம் மிக்க நாடாக விளங்குகிறது.

போரில் தோற்றுவிட்ட தேசங்கள் ஜப்பானும் ஜெர்மனியும் தம்மைப் போர்த்தளவாடங்கள் கொண்டு வளப்படுத்திக்கொள்ள முடியாது. அவர்கள் கட்டுப்படுத்தப் பட்டு இருக்கிறார்கள். அதனால் அந்த தேசங்களுக்குப் பெரு நன்மை; அவர்கள் ஆக்கப் பொருள் படைப்புகளுக்குத் தம் ஆற்றலையும் சக்தியையும் கனிமப் பொருள்களையும் பயன் படுத்துகின்றனர். தரம் மிக்க எந்திர மின்சாரப் படைப்புகளைத் தந்து வருகின்றனர்.

எந்த ஒரு நகரத்திற்குச் சென்றாலும் பார்க்கத் தகுந்த காட்சிகளாக உயரமான சர்ச்சுகளும் கடைவீதிகளும்தான் இருக்கின்றன. கடைகளில் சென்று பொருள்களை வாங்க நாம் வெளியே போகிறோம். அங்கே அந்த நாட்டு மக்கள் கடைவீதிகளில் குழுமிச் செல்லும் காட்சியைக் காண முடிகிறது. கலகலப்பான வாழ்க்கை; பல தேசப்பயணிகளைக் காண முடிகிறது. அவர்கள் அனைவரையும் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறமுடியாது; கடைக்காரர்களைத்தான் அந்த நாட்டுவாசிகள் ‘ என்று உறுதியாகக் கூறமுடியும், ஐரோப்பிய நாடுகள் பல இடத்திலிருந்து ‘டூரிஸ்டுகள்’ வந்து போய்க்கொண்டு இருக்கின்றனர். அதேபோல் இங்கிலாந்திலும் ஷேக்ஸ்பியர் வாழ்ந்த நகரம் மற்றும் பல்கலைக் கழகங்கள் உள்ள நகரங்கள் இந்த இடங்களில் பல தேசத்துப் பயணிகளைப் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு நாடும் பாரதத்தை விட மிகச் சிறியவையே. அவர்கள் மற்ற பகுதிகளுக்குச் செல்வதும், மாற்றம் கண்டு மகிழ்வதும், சுற்றுலாச் செல்வதும் வாழ்க்கை நடைமுறைகள் ஆகின்றன.