பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இங்கிலாந்தில் சில மாதங்கள்

அறிமுகம்

எங்கிருந்து தொடங்குவது; எதை எழுதுவது எதை விடுவது என்பதுதான் பிரச்சனை. பயணக் கட்டுரை என்றால் அதற்கு ஒரு ஆரம்பம் ஒரு முடிவு அமைய வேண்டும். நிறைய பொருள் வசதியும் உலகம் சுற்றும் இயல்பும் அறிந்தவற்றைத் தொகுத்து அதிசயிக்கத்தக்க வகையில் எழுத வேண்டும். ‘உலகம் சுற்றும் தமிழன்’ என்ற ஓர் ஆக்கப் படைப்பு முதல் முதலில் தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றது. திரு. ஏ. கே. செட்டியார் இந் நூலை எழுதினார். இந்த நூலை எழுதுவதற்காகவே அவர் உலகம் சுற்றிப் பார்த்தாரா உலகம் சுற்றிப் பார்த்த பிறகு இந்த நூல் எழுதினாரா சொல்ல முடியாது.

அப்படி எழுதப்படும் நூல் அல்ல; பயணத்தைப் பற்றி எழுப்பப்பட்ட விசாரணைக்குத் தரப்படும் பதிலே இது. ஒரு தமிழாசிரியன் இந்த நாட்டுப் பண்பாட்டிலும் சிந்தனைகளிலும் வாழ்வியலிலும் வாழ்ந்து பழகிப்போன ஒருவன் புதிய மண்ணில் கால் வைத்து (கால் கீழே வைக்க முடியாது : குளிர் தேசம்) அங்குச் சில மாதங்கள் தங்கி எந்தத் தொழிலும் இல்லாமல் பொழுது போக்கிய ஒரு சோம்பேறித்தனமான வாழ்க்கையில் ஒட்டிக்கொண்ட சுவடுகள் சிலவற்றைத்தான் இங்குப் பதியவைக்க முடிகிறது.

‘வெள்ளையனே வெளியே போ’ என்ற குரல் கொடுத்த நாடு இது. அதாவது அவர்கள் நம்மை ஆண்டார்கள்;