உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

கிராமம்’ (deserted village) என்ற பாடல் இன்னும் நினைவில் நிற்கிறது. கொல்லன் உலைக்களத்தை ஊதி இரும்பை வடித்துக் கொடுப்பதும், பள்ளி ஆசிரியர் தம் அறிவை வாரி வழங்கித் தன் பெருமிதத்தைப் புலப்படுத்துவதும், கிராமப் பாதிரி மக்களுக்கு நல்வாழ்வுக்கு வழிகாட்டுவதும் இப்படிப் பல காட்சிகள் சித்திரிக்கப்படுகின்றன. கிராமங்கள் புறக்கணிக்கப்படும் நிலையை அவர் சித்திரிக்கிறார். இப்பொழுது அங்கு கிராமங்களே இல்லை என்றுதான் சொல்ல முடிகிறது. அனைத்தும் நகர் வடிவம் பெற்று விட்டன. மின்சாரம், தொலைக் காட்சிகள், தொலைபேசிகள், நெடுஞ்சாலைகள், வசதிமிக்க கார்கள் கிராமங்களை நகரங்களாக மாற்றிவிட்டு இருக்கின்றன. அங்கே பார்க்க முடியாத ஒன்று கிராமம் தான்.

பயிர்கள் பண்ணைகள் பெரும் அளவில் மைல் கணக்கில் வளைக்கப்பட்டு இயங்குகின்றன. விவசாயம் தக்க தொழில் கருவிகள் மூலம் நடக்கின்றன. எந்திரங்கள் துணை செய்கின்றன. அவற்றை எல்லாம் அறியும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. சென்ற இடமெல்லாம் நகர்களையே காண முடிந்தது. விவசாய நாடு என்பது மாற்றப்பட்டு முற்றிலும் தொழில்வளம் மிக்க நாடாக இங்கிலாந்து மாறிவிட்டது. அவர்களுக்குக் காய்கறிகள் உணவுவகைகள் வெளிநாடுகளிலிருந்து வந்து குவிகின்றன.

அங்கங்கே கோழிப் பண்ணைகள், மாடுகள், ஆடுகள், பன்றிகள் பண்ணை முறையில் வளர்க்கப்பட்டு வேண்டிய இறைச்சி சந்தைகளுக்கு வந்து சேர்கின்றன. பால் பண்ணைகள் மிகுதியாக உள்ளன. இவை எல்லாம் பெருத்த அளவில் மிக்க முதலீட்டு முறையில் தொழில்களாக நடத்தப்படுகின்றன என்பது தெரிகிறது. மொத்தமாகப் பார்க்கும்போது நகரங்களைப் பார்க்க முடிந்ததே தவிர கிராமங்களைப் பார்க்க முடியவில்லை என்றுதான் கூற முடிகிறது.