பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95

நாம் உண்டு நம் வேலை உண்டு! என்ற போக்கு நகரப் போக்கு. அடுத்த வீட்டுக்காரன் என்ன செய்கிறான் என்று அறிந்து, அதைப் பற்றிப் பேசி விமரிசிப்பது கிராமியப் பழக்கம். பக்கத்து வீட்டுக்காரர் யார் என்று கேட்டால் கேட்டுத்தான் தெரிந்துகொள்ளவேண்டும். அவரையேதான் கேட்டு அறியவேண்டும். இப்படிப் பல குறைபாடுகள் பேசப்படுகின்றன, நாமே சில சமயம் அண்டை வீட்டில் பேசித் தொடர்பு கொள்ளத் தொலைபேசியைப் பயன்படுத்துகிறோம். ஏன் அவர் வீட்டுக்குச் சென்று கூப்பிட்டுப் பேசுவதில் சிரமம் இருக்கிறது. அந்த சிரமம் தொலை பேசியில் இல்லை. நான் சில முறை அப்படிப் பேசி இருக்கிறேன்.

இந்த நிலையை அங்கு உணர்கிறேன், அங்கே அடுத்த வீட்டுக்காரர் யார்? அவர் என்ன தொழில் செய்கிறார், குழந்தைகள் எத்தனை? மணவாழ்க்கை எப்படி? காதல் கலியாணமா? எப்படி இவர்கள் அறிமுகமானார்கள்! பிள்ளைகள் என்ன பண்ணுகிறார்கள். ‘யூ கே ஜி’ ‘எல் கேஜி’ இப்படி எந்த ‘கேஜில்’ அவர்கள் பிடிபட்டு இருக்கிறார்கள் எனறு கேட்டு அறிவதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. அந்த சுவாரசியம் அங்குக் காண முடியாது.

அடுத்தவரைப் பற்றி என்னதான் தெரியும் என்று கேட்டேன்.

“தெரிந்து கொள்ளாமலே இங்கு வாழ முடியும்” என்ற பதில் வந்தது.

ஒரு வீட்டுச் செய்தி மற்றொரு வீட்டுக்கு எட்டுவதில்லை. அதனால் ஒரு நன்மை, நாம் பெரும்பாலும் அக்கம் பக்கத்தவர்கள் என்ன சொல்வார்கள் என்று அஞ்சித்தான் வாழ்கிறோம். அங்கே யாரும் எதையும் சொல்லமாட்டார்கள்