பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

அன்னைக்கு மாலை சூட்டவா இந்தச் சுடுநீர் மாலை?

“ஊர்வசி, உன் வீடு வந்திட்டுது. வா. போகலாம்", என்று அவளை அழைத்தான் அம்பலத்தரசன்.

ஆஸ்பத்திரியை நோக்கிச் சீசாவும் கையுமாக, நோயும் உடம்புமாகப் போய்க் கொண்டிருந்த கிழவர் ஒருவர் அம்பலத்தரசனையும் ஊர்வசியையும் மாறிமாறி-மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டே சென்றார்.

அவன் கொடுத்த அழைப்பை அவள் செவி மடுத்த தாகத் தோன்றவில்லை

அவள் தோளைத் தொட்டு,"ஊர்வசி,” என்று கொஞ்சம் அழுத்தப் பதித்துக் கூப்பிட்டான் அவன்,

அவளுக்குத் தன்னுணர்வு சிலிர்த்தது. அவள் ஏறிட்டு விழித்தாள். கண்ணிரைத் துடைத்துக் கொண்டாள். சுற்று முற்றும் நோக்கினாள். “வீடு வந்திட்டுதே! வாங்க போவோம்" என்றாள் குரலில் இருந்த அவசரம் அவளது பாதங்களில் இருக்கவில்லை. என்றாலும், ஜன நடமாட்டம் கூடுதல் படவே, அவள் சூழலை அனுசரித்து, 'சடக்’ கென்று திரும்பி நடந்தாள்.

எதிர்த்திசையில் அவள் குடியிருந்த வீடு இருந்தது.

இருவரும் வீதியைத் தாண்டி நடந்தார்கள்,

காலை இளங்காற்றில் சாய்ந்தாடிய சீமைக் கொன்றைகள், அவர்கள் இருவரையும் வரவேற்றன.

தவறு இழைத்த குழந்தை தாய் முகம் காண அஞ்சுமே அந்தப் பாவனையில் அஞ்சிச் செத்தாள் ஊர்வசி. ஆனால் அவளுக்கு உயிர் கெட்டி!

“நான் இருக்கேன், பயப்படாதே!