பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

சாம்பான் எச்சிலை ஒழுங்கையில் உமிழ்ந்தபின், திரும்பி வந்து குந்தினார் அவருக்குத் தூக்கம்—போய் விட்டது. எதை நினைப்பார் அவர் ? அவர் எதை மறப் பார்? —நினைவும் மறதியும்தான் வாழ்க்கையா ?

வாழ்க்கை வேடிக்கையாகத்தான் விளையாடுகிறது. விளையாட்டுக் காட்டுகிறது !

இந்த விதியை விலக்கி வைத்து விட்டு, தெய்வானையோ அல்லது, வேலாயுதமோ வேடிக்கை பார்க்கவோ, இல்லை. வேடிக்கை காட்டவோ முடியுமோ ?

நடந்த கதை நடந்து காட்டியது :

சேரியில், கீழத் தொங்கலில் இருந்த தெய்வானையும் வள்ளியும் உயிருக்கு உயிரான தோழிமார்கள்; அதற்கு சமதையாகவே, மேலக்கோடியிலிருந்த வேலாயுதமும் முத்தையனும் உயிரும் பிராணனுமான சேக்காளிகள்.

ஆதியிலிருந்தே, தெய்வானைக்கு முத்தையன் என்றால் ஒரு கண்; நேசக்கண் அது. அவனுடைய நேசக்கண்ணாடியாக ஆகிவிட வேண்டுமென்று சொப்பனம் கண்டாள் அவள்.

அதுபோலவே —

வள்ளியின்மையல் வேலாயுதத்தின் பேரிலே நிலைத்தது.

இருதரப்பு ஆண்பிள்ளைச் சிங்கங்களும் கரும்பு தின்னக் கூலி கேட்க வில்லைதான்!

இப்படிப்பட்ட நிலையில்—சூழ்நிலையில்தான், எதிர்பாராத சோதனையொன்று பேயாட்டம் போட்டது.

“ஒரு கமுக்கமான துப்பு தெரியுமாங்காட்டி? நம்ம தெய்வானைக் கன்னிக்கு இஷ்டப்பட்ட முத்தையன் குடிகாரனாமே? கூத்திக் கள்ளனாமே?”