பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


விதியின் நாயகியும் அவளே !

'அன்னக்கிளிப்புள்ளயோ! 'அரிசி முறுக்கைப் பருந் திடம் பறி கொடுத்து விட்டுப் பச்சைப் பாலகன் செருமு வானே, அப்படிச் செருமினான் முத்துலிங்கம், 'அன்னக் கிளிக்குட்டி, இனிமை எப்பொறப்பிலே ஒன்னை நான் காணப் போகுறேன் ? நானு பாவியிலேயும் கேடுகெட்ட பாவியாகிப் பூட்டேனே!' பழிகாரனாவும் ஆகிப்பூட்டேனே நெஞ்சம் அழ நினைவுகள் அழுதன மனம் அழ, மனச்சாட்சி அழுதது. உள்ளம் அழ, உள்ளத்தின் உணர்வுகள் அழுதன.

கஞ்சிப் பொழுதிலே நடந்தது ;

சாலையிலிருந்து கிளை பிரிந்து, பூவத்தக்குடிக்கு வழி காண்பிக்கும் ஒற்றையடிப்பாதையில், செல்லத்தேவன் ஊருணிக்குக் கீழ் வசத்தில் ‘அன்னம் வந்திடும்; வளமைப் படி வந்து குதிச்சுப்பிடும்' என்று எண்ணி எண்ணி, மகிழ்ந்து மகிழ்ந்து காத்துக்கிடந்தான் அவன்.

அவள் வந்தாள்.

வந்தவள் அன்னக்கிளி.

சுட்டுப் பொசுக்கின உச்சி வெய்யிலில், சுடாமல் வந்தாள் புண்ணியவதி, தேடி வந்த சீதேவியும் அவளாகவே இருக்கலாம்.

அன்னத்தைக் கண்டதுதான் தாமதம்; அவன் வாய் கொள்ளாமல் சிரித்தான்; மனம் கொள்ளாமல் சிரித்தான். "வந்திட்டியா, புள்ளே!" என்று அன்பாக, ஆசையாகக் கேட்டான். ஐந்து வயதிலே, அறியாப் பவருத்திலே ‘ஒழுங்கை'யின் மணல் வெளியிலே 'புருசன்-பொஞ்சாதி; விளையாட்டுக்கு உயிர் தந்த, உயிர்ப்புத்தந்த அன்னக் குட்டியின் புனிதத் தரிசனம் பூவாக மணக்கிறது; பூநாகமாக நெளிகிறது.