பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

இப்போதும் ஒருவாய் பருகினான். இடது கை விரலிடுக்கில் புதைந்து கொண்டிருந்த சிகரெட்டின் நெடி அல்லது வாடை அவனுக்கு உணக்கையாகவே இருந்தது.

மீண்டும் நெட்டுயிர்ப்பு.

உருவான- உருக்கொண்ட எழுத்துக்களை மறுபடி அவன் படித்துப் பார்க்க ஆசைப்பட்டான். வழக்கமாகத் தோன்றும் ஆசைதான் இது. எழுதிய விமரிசனத்தை ஒன்றிய இலக்கிய மனத்துடன் படித்து ரசிப்பதென்பது அவனுக்கு நிரம்பவும் பிடித்தமான செயல்; ஆகவே சிகரெட்டின் புகையை இழுத்துத் துப்பினான்; எரிந்த சிகரெட்டுத் துனடத்தை வீசினான்; 'க்ளிப்' போட்டிருந்த தாள்களை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டான்; மேஜை விளக்கின் வெளிச்சம் அதன் பாதத்தில் துல்லிய மாகப் படர்ந்தது. அகில இந்தியக் காங்கிரஸ் தலைவரை ருஷ்யப் பிரதமர் இன்முகம் காட்டி வரவேற்ற காட்சியில் வெளிச்சம் விழ தப்பவில்லை!

வெண்ணிறச் சுவரில் மகாத்மா கொலுவீற்றிருந்தார்!.....

தான் விமரிசகனாக அமைந்து எழுதிய அந்த நாடக விமர்சனத்தை இப்போது ரசிகனாக அமைந்து படிக்கத் தொடங்கினான் அம்பலத்தரசன். மேடையில் அழகின் நிலவாகத் தோன்றிய கதாநாயகி குமாரி ஊர்வசி சிரித்த சிரிப்பும் அழுத அழுகையும் அவனுள் திரும்பவும் சல னத்தை உண்டாக்கிவிட்டன. விமரிசனத் தாள்களை அப்படியே மேஜையில் போட்டுவிட்டு. அறையிலிருந்து வெளிப்புறம் வந்தான்.

வான் பிறை. நிலவையும் அழகையும் இயற்கையின் சீதனமாக உலகத்துக்கு வாரி வழங்கிக் கொண்டிருந்தது.

காற்று சுகமாகத் தவழ்ந்தது.

அமைதி படிந்து, படர்ந்திருந்த நேரம்.