பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

"இருக்க ; நம்ம டாட்ஜிலேயே போகலாம். வழியில் உங்களை ட்ராப் செய்கிறேனுங்க” என்று மொழிந்தான் பூமிநாதன். பவ்யமாக வேண்டினான் அவன்.

பூமிநாதனின் உபசாரம் அவனுக்குத் தலைக் கிறு கிறுப்பை உண்டாக்கியது. 'தலைவலி போய் திருகுவலி வந்த கதை'யாக ஆகிவிடுமே! பூமிநாதனோடு புறப் பட்டால் அறையின் வாசலில் இறக்கி விட்டுவிட்டு, அத்துடன் போக மாட்டாரே பூமிநாதன்! அறைக்கும் வந்து விடுவாரே! வந்தால், இங்கு அடைக்கலப் பொருளாக இருக்கும் குமாரி ஊர்வசியையும் அல்லவா அவர் பார்க்க நேரிடும்? ஊஹாம், வேண்டாம் இந்தத் தலைவேதனை! என்னைப் பற்றி அவர் ஐயப்படுவது இருக்கட்டும்! ஆனால், ஊர்வசியின் நிலைமையும் அல்லவா தர்மசங்கடமாகி விடும். ஊஹாம், வேண்டாம் இந்த விஷப் பரீட்சை !

பூமிநாதன் பற்ற வைத்த சிகரெட்டுடன் கிளம்பத் தயாராக எழுந்து காரின் அருகே வந்து, "புறப்படலாமா லார் ?" என்று கேட்டான். சட்டையைத் தூக்கி விட்ட போது, அவனது மார்புப் பகுதியில் பெரிய ரத்தத் தழும் பொன்று தெரிந்தது.

"காலம் கடந்திட்டுது நீங்க புறப்படுங்க. நான் ‘காலி'யை ஒரு க்ளான்ஸ் பார்த்திட்டுத்தான் வரவேணும்" என்று பொய் சொன்னான் அம்பலத்தரசன்.

“அப்படியானால், நானும் வெயிட் பண்ணுறேனே ! உங்கள் விமர்சனத்தை நானும் சூட்டோடு சூடாகப் பார்த்த மாதிரியும் ஆகிடுமே" என்று தெரிவித்தான் பூமிநாதன். கழன்று விட்டிருந்த பொத்தானைப் போட்டுக் கொண்டான் அவன்.

மீள முடியாத தவிப்பில் சிக்கிக் கொண்டான் அம்பலத் தரசன். மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் ஒரு கணம் திண்டாடிப் போனான் அவன்.