பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 13 —

1700 கோடி செலவானதாகக் கணக்குக் காட்டினர். இந்த வகையில் நடந்த தில்லு முல்லுகளும், ஊழல்களும் ஏராளம். இது பற்றியே ஒரு தனிக் கட்டுரை எழுதப்பட வேண்டும். இது பற்றியெல்லாம் இந்த நாட்டின் ஏழை மக்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் எதுவும் தெரிய வாய்ப்பில்லை. அதை அவர்கள் தெரிந்து கொள்வதையும் அரசு விரும்புவதில்லை. எப்பொழுதும் இது போன்ற ஊழல்கள் அரசினரால் கரவாக, வலக்காரமாகத் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. இவ்வனைத்துச் செயல்களுக்கும் இந்திராதான் வித்திட்டவர். இந்திய அரசியலையே அவர் நாற அடித்துவிட்டார். அதன் தீ நாற்றத்தைப் பல நூறு மடங்குகளாகப் பெருக்கிவிட்டவர் அவரின் அரசியல் பிறங்கடை(வாரிசு) ஆன இராசீவே! எனவே இராசீவை நினைக்கும் பொழுதெல்லாம் அவரின் அளவு மீறிய, தாறுமாறான வளர்ச்சிக்கு அடிப்படையான அவருடைய தாயை — இந்திராவை நாம் நினைத்துத்தான் ஆகவேண்டும்.

இராசீவ் ஒரு முள்மரம்!

இனி, இராசீவின் மறைவு குறித்த செய்திக்கு நாம் வருவோம். அவரின் மறைவு, காலத்தால் தேவையானது. இனிமேலும் அம் முள்மரம் இந்தியாவில் வளர்ச்சி பெற்றால் பார்த்தீனியம் என்னும் நச்சுச் செடி பரவியது போல நாடெல்லாம் பரவியிருக்கும். நல்லவேளை, அவர் மறைவுற்றது நாட்டுக்கு நல்லதாக — குறிப்பாக நந் தமிழினத்திற்கு மிகவும் நல்லதாகப் போயிற்று. பெரும்பாலும் தீமைகள், கொடுமைகள் தாமாக அழிவதில்லை. நல்லவை நல்ல சூழல் இருந்தால்தான் நிலைத்து நிற்கும். ஆனால் தீமைகள் அவ்வாறில்லை. நல்ல சூழல் இல்லையானாலும் அவை வளர்ந்து செழிக்கும். நெல்லுக்கு நல்ல வயலும், நல்ல எருவும், நீரும், பாதுகாப்பும், கண்காணிப்பும் தேவை. ஆனால் புல்லுக்கு அவை தேவையில்லை. எந்தச் சூழலிலும் அவை வளரும்; நிலைத்து நிற்கும். அது போல்தான்