பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 25 —

எதிர்கொள்வது? ஏற்கனவே தமிழினம் சாதி முள்வேலிகளாலும், மத மதில்களாலும், பல்லாயிரம் பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் வேறு அவர்தம் நோக்கங்களையும் கொள்கைகளையும் செதிள் செதிள்களாகப் பிரித்தெடுக்கின்றன. திரைப்படக் கயவர்கள் வேறு மக்களின் ஒருமுகச் சிந்தனைகளை வளர விடாமல் தடுத்துக் கொண்டு சதிராட்டம் போட்டு வருகின்றனர். இவ்விருண்டு வரும் சூழ்நிலையிலும், மக்களெல்லாம் அரண்டு கிடக்கும் அரசியல் கொலைவெறிப் பதற்றங்களுக்கிடையிலும் தமிழக மக்களை மீட்டெடுப்பது எப்படி என்று உண்மையான - ஆனால் வலுக்குன்றிய சிறு சிறு இயக்கத் தலைவர்களெல்லாரும், சிந்தித்துத் தம்முள் ஒன்றுபடும் திறனின்றிக் கண்ணாம் விழிகள் பிதுங்கிக் கிடக்கின்றனர். அறிஞர்களெல்லாரும் ஆளுக்கொரு கொள்கை வழியைப் பற்றிக் கொண்டு, தங்களின் இணைபாதையை மேலும் மேலும் அகலமாக்கிக் கொண்டு, சோர்ந்து கிடக்கும் தமிழர்களிடையே தங்கள் தங்கள் அறிவு விளைச்சலுக்கு ஆக்கந் தேடிக் கொள்கின்றவர்களாக மாறி வருகின்றனர். தங்கள் விளைவு மூட்டைகளுக்கு ஏற்ற விற்பனைச் சந்தைகளை அமைத்து வருகின்றனர். தமிழகமே இருண்ட புதர்க்காடாகவும், மருண்ட சுடுகாடாகவும் மாறி வருகின்றது.

இவற்றுக்கிடையில் பேராயக் கட்சியை அடுத்த தலைமுறை வரையிலேனும் நகர்த்திச் செல்லத் தக்க தலைமையில்லாமல் அஃது அல்லற்படுவதைச் சரிகட்ட, இராசீவின் மனைவி சோனியாவையேனும் இந்தியத் தலைமை தாங்கச் செய்ய அரும்பெறல் முயற்சிகளைச் செய்து, மனஞ்சலித்த பின்னர், வடவிந்தியத் தலைவர்களும், தென்னிந்தியத் தலைவர்களும் கைகளைப் பிசைந்தும் கண்களைக் கசக்கியும் போலி நாடகங்களை மக்கள் முன் ஆடிக் காட்டுகின்றனர்.

எப்படியோ, இந்திய அரசியல் தலைமை வாயாமல்,