பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 27 —

வரை நின்று பொருதிச் சாவது என்ற விடுதலை வேட்கையுடன் பல்வேறு இடையூறுகளுக்கிடையிலும் தோள் தாழாது போராடி வருகின்றார்!

நிலைகள் இவ்விவ்வாறு, தமிழின முன்னேற்றத்திற்கும் உரிமை மீட்புக்கும் எதிரானவையாக இருப்பதை நாம் மறந்துவிடவோ மறுத்துவிடவோ முடியாது. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இப்பெருந் தமிழினத்துள், திருவள்ளுவப் பேராசான் கண்ட 'பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும்' இன்னும் மறைந்தபாடில்லை.

தந்தை பெரியாரின் தன்மானத் தமிழுரிமை மீட்புத் தனிநாட்டுப் பெருங்கொள்கையும், புரட்சிப் பாவேந்தரின் அருந்தமிழாட்சியின் இரும்பேரிலக்கணக் கோட்பாடாகிய 'தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ் நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும்'. 'தமிழ்ப் பகைவன் முதலமைச்சாய்த் தமிழ் நாட்டில் வாராது தடுத்தல் வேண்டும்!' — எனும் கனவு வரிகளும், 'ஆன என் தமிழர் ஆட்சியை நிறுவும்' தொலைநோக்குப் போராட்டப் பார்வையும் என்னவாயின? எவருடைய நினைவில் இன்னும் எண்ணத்திரட்சியாக உள்ளன? எப்படியும் காலம் தானாகவே கனியப் போவதில்லை.

தமிழ் இளைஞர்களின் இன்றைய அவல நிலை:

இந்நிலையில், இற்றை இளைஞர்கள் சிலர், தமிழீழ உரிமை வெடிப்புகளைக் கண்டு, இங்கும் தமிழின உரிமைப் போராட்டம் ஒன்று உருப்பெறாதா என்னும் ஏக்கத்தில் காலத்தையும், இடத்தையும், நாட்டுநிலைகளையும் கூர்த்து நோக்கியவாறு இருப்பதையும் நாம் உணர முடிகிறது. இவ்விளைஞர்களுடன் தோளொடு தோளாக இருந்து இயங்க வேண்டிய மாணவர் கூட்டமோ, வெறும் வீணவர் கூட்டமாக, வெள்ளித் திரையில் நடக்கும் வேடிக்கைச் சண்டைகளைப் பார்த்து, வெறும் வாயைக் குதப்பிச் சுரக்கின்ற எச்சிலுடன், தங்கள் வீர உணர்வுகளையும் விழுங்கி,