உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய உணர்ச்சி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உணர்ச்சி

17


தேசங்களிலும் வணங்கப்பட்டு வந்தது என்றால் மார்க்கனுடைய சிறப்பை எவ்வாறு அளவிடக்கூடும்?

அந்தப் பெருந்தகையின் உடல் வாழ்வு இத்தன்மையதாக, அவனுடைய ஆன்ம வாழ்வின் செளந்தரியத்தைச் சிறிது கவனிப்போம். அவனுடைய ஆன்ம வாழ்வை அறிவதற்கு நமக்கு ஆதாரமாக உள்ளவை அவனுடைய மணிமொழிகளே. இம்மணிமொழிகள், தினந்தோறும் தனக்குத் தோன்றிய பொழுதும், ஆறுதல் வேண்டிய காலத்தும், அநேகமாகப் போருக்குச் சென்றிருந்த காலத்தில் பாசறையில் வைத்தும் எழுதப்பட்டவை. எல்லாம் அவன் சொந்தப் பார்வைக்கென்றே எழுதப் பட்டவை. அவைகளில் அவனுடைய அருளறம் பூண்ட நெஞ்சம் தெளிந்த நீர் போல் பிரகாசிக்கின்றது. அவனுடைய கொள்கையையும், அதன்படி நடக்க அவன் பட்ட கஷ்டங்களையும், அக்கஷ்டங்களை நீக்க அவன் கொண்ட வழிகளையும், பிறவற்றையும் அவைகளில் நாம் பார்க்கக் காணலாம்.

அவனுடைய மொழிகள் எவ்விதத்தில் நமக்கு நன்மை பயக்கும்? உலகில் எத்தனையோ பெரியோர்கள் நீதிநெறியைப் பல வழிகளில் விளக்கியிருக்கின்றனர். ஆனால் வெகு சிலருடைய மொழிகளே, கேட்பாரைப் பிணித்து, கேட்டவையின்படி செய்யத் தூண்டக் கூடியவைகளாயிருக்கின்றன. அத்தகைய குணமுடையன மார்க்க ஒளரேலியனுடைய மணிமொழிகள். ஆகையால், அனைவரும் அவற்றை வாசித்து, மனம் திருந்தி, நல்வாழ்வு பெறவேண்டு மென்பதே என் அவா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/19&oldid=1105517" இலிருந்து மீள்விக்கப்பட்டது