இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காலையில் எழுந்தவுடன் கீழ்க்கண்டவாறு சிந்திப்பாய் : இன்று நான் நன்றி கொல்பவனையோ, அல்லது பொறாமையுடையவனையோ, அல்லது வஞ்சகம் செய்பவனையோ சந்திக்கக்கூடும். அவர்களுக்கு இக்குணங்கள் அமைவது எப்படி? நன்மை இது, தீமை இது என்னும் பகுத்தறிவு இன்மையேயாகும். ஆனால், நன்மை அழகுள்ளது, தீமை அழகற்றது, தீங்கிழைப்பவன் ரத்தத்தால் மட்டுமன்றி, அறிவினாலும், மக்களிடமுள்ள தெய்வாம்சத்தாலும் எனக்கு உறவினனென்று நான் அறிவேன், ஆகையால் ஒருவரும் எனக்குத் திங்கிழைக்க முடியாது, நானும் என் உறவினர்களைக் கோபிக்கவும் முடியாது, பகைக்கவும் முடியாது. நாம் அனைவரும் தேகத்திலுள்ள கை கால்கள், கண்ணிமைகள் போல ஒத்துழைக்கவே உண்டாக்கப்பட்டிருக்கிறோம். ஒருவர்க் கொருவர் விரோதமாய் நடப்பது இயற்கைக்கு விரோதம். ஒருவரிடம் கோபப்படுதலும், அவரைவிட்டு அகலுதலும் ஒருவர்க்கொருவர் விரோதமாய் நடப்பதேயாகும்.