உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய உணர்ச்சி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6

நின்று அவற்றை ஒரு சாக்ஷியைப்போல் பார்த்தறிந்து எழுதினவராவார். மார்க்க ஒளரேலியனோ ஒரு சக்ரவர்த்தி, சுமார் பதினேந்து லக்ஷம் சதுர மைல் விஸ்தீரணமுள்ள ஓர் ஏகாதிபத்தியத்தை ’வறிஞன் ஓம்பும் ஓர் செய் எனக் காத்து’ ரக்ஷித்துவந்த அரசர்க்கரசன். அவனுடைய ஆத்மவிசாரணை போர்க்களத்தினிடையிலும், மந்திர சபை கூட்டங்களின் மத்தியிலும், நீதி செலுத்தும் மன்றங்களிலும், சூழ்ச்சிக்காரர்களுடைய சூழ்ச்சியைக் குலைக்கச் செய்யும் முயற்சிகளுக்கிடையிலும் நிகழ்ந்ததாகும்.

கர்மணைவஹி ஸம்ஸித்திம்
ஆஸ்திதா ஜனகாதய :

ஜனகர் முதலானவர்கள் கர்மத்தினாலேயே மோக்ஷ சித்தி அடைந்தனர் என்ற கீதா வாக்கியம் (௩, ௧௯) மார்க்க ஒளரேலியனுக்கும் பொருந்தும் என்றால் அவனுடைய பெருமை படிப்போருக்கு ஒருவாறு விளங்கும். அசோகன், ஸ்ரீ ஹர்ஷன், குலசேகரன், சேரமான் பெரு மாள் நாயனார் ஆகிய இம்மகான்களைத்தான் ஒளரேலியனுக்கு ஒப்பிட்டுச் சொல்லமுடியும். இத்தகைய பெருந்தகை தன்னுடைய அபூர்வமான அனுபவத்தில் தன் மனத்தில் எழுந்த எண்ணங்களையெல்லாம் குறித்துவைத்ததைப் பிற்காலத்தவர் உலகிற்குப் பிரயோஜனமாகும்படி கிரேக்கிலும் லத்தீனிலும் தற்கால பாஷைகளிலும் வெளிப்படுத்தியுள்ளார்கள், ஸ்ரீமான் பிள்ளை ஆங்கில மொழிபெயர்ப்பினின்று இம்மணிமொழிகளைத் தேர்ந்தெடுத்துத் தமிழ்ப் படுத்தி வெளியிடுகிறார்கள். இம்மொழிகளை மொழி பெயர்த்ததோடு நில்லாமல், அவர் ஆசிரியனுடைய சரித்திரத்தையும், அவன் காலத்தில் அவனது ஏகாதிபத்தியம் இருந்த நிலைமையையும் பற்றிய சில செய்திகளை முகவுரையில் எடுத்துக் காட்டிப் படிப்போருக்கு ஆசிரியனுடைய உள்ள நிலைமையை நன்கு தெரியும்படி செய்துவைத்திருக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/8&oldid=1105355" இலிருந்து மீள்விக்கப்பட்டது