பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

101



அடக்குமுறை வேதாளம்
மீண்டும் மரமேறியது:

பிரிட்டிஷ்காரர்களுடைய புதிய தலைமை ஆளுநர்கள் ஓரளவு பத்திரிகை உரிமைகளைக் கொடுத்த நிலை மாறி, மறுபடியும் அடக்கு முறை என்ற வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையானது. காரணம், 1857-ஆம் ஆண்டில் உண்டான முதல் சுதந்தரப் போர்தான்!

1857 - ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இராணுவத்திற்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மனித உரிமைப் போரை, இந்திய வரலாற்றின் முதல் சுதந்தரப் போரை, ஆங்கிலேயர்கள் ‘சிப்பாய் கலகம்’ என்று கூற ஆரம்பித்தார்கள்.

முதல் சுதந்தரப் போர், ஆங்கிலேயர்களது கம்பெனி ஆட்சியை வேரோடும் வேரடி மண்ணோடும் நிலை குலையச் செய்துவிட்டது. இந்தியர்களின் இந்த ஆவேசப் போராட்டத்தைக் கண்டு கம்பெனி ஆட்சி பீதியடைந்தது; அச்ச முற்றது; இதற்குக் காரணம் பத்திரிகை பலமல்ல என்றாலும், பத்திரிகைகளை இந்தியாவில் வளரவிடுவது ஆபத்தானது என்று ஆட்சியாளர்கள் எண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த அச்சத்தால், 1857-ஆம் ஆண்டில் கம்பெனி நிர்வாக ஆட்சி ஒரு கடுமையான சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு GAGGNG ACT அதாவது வாய்ப்பூட்டுச் சட்டம் என்று பெயரிடப்பட்டது-அப்போதைய பத்திரிகையாளர்களால்! இந்தச் சட்டத்தால் இந்திய இதழ்கள் வளர்ச்சி மிகவும் பாதித்தன.

விக்டோரியா
பேரரசி அறிக்கை

இந்த நேரத்தில் இங்கிலாந்துப் பேரரசி விக்டோரியா, ‘இந்தியா இனிமேல் இங்கிலாந்து நாட்டு ஆட்சிக்குக் கட்டுப்பட்டது’ என்ற ஓர் அறிக்கையை வெளியிட்டார். அத்துடன் கிழக்கு இந்தியக் கம்பெனி ஆட்சியின் நிர்வாகமும் முடிந்தது.