பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

105


தமிழ் வாரப் பத்திரிகையை நடத்தி இருக்கின்றார். இந்த வார ஏடு செய்திகளுக்கு மட்டுமே முதலிடம் தராமல், அறிவியல் வளர்ச்சிகள் பற்றிய புதிய கண்டு பிடிப்புக்களுக்கும், இலக்கிய ஆய்வுகட்கும், கலை உணர்வுகளுக்கும், பிற கட்டுரைகளுக்கும் இடமளித்து அவர் பத்திரிகையை நடத்தியுள்ளார். அதனால், ‘தினவர்த்தமானி’ என்ற இந்த தமிழ் வார ஏடு; தமிழப் பத்திரிகை உலகில் முக்கியமான ஓர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடும் நிலை பெற்றுள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியில் நடைபெற்று வந்த கல்வித் துறை; ஒரு பத்திரிகையை நடத்திட ஆதரவளித்து வந்தது. அந்த பத்திரிகையின் பெயர் ‘ஜநவிநோதினி’. இந்த இதழ் 1870-ஆம் ஆண்டில் வெளி வந்தது. இந்தப் பத்திரிகை பிரிட்டிஷார் உதவியோடு வெளியிடப்பட்டதால் இங்கிலாந்து நாட்டிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் இருக்கும் கல்வி சம்பந்தப்பட்ட கட்டுரைகளை எல்லாம் தமிழில் மொழி பெயர்த்து இந்த திங்கள் ஏடு வெளியிட்டது.

தமிழ் நாட்டுப் பத்திரிகை உலக வரலாற்றில் முன்னோடியாக விளங்கியவர்களில் மற்றொருவரும் இருந்துள்ளார். அவர் பெயர் சே.ப. நரசிம்மலு நாயுடு என்பதாகும். சே.ப. நரசிம்மலு நாயுடு என்பதன் முழு பெயர், சேலம் பகடால நரசிம்ம நாயுடு என்ற விவரத்தை திரு. பெ.சு. மணி அவர்கள் தனது ‘காரல் மார்க்சின் இலக்கிய இதயம்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சேலம் பகாடல நரசிம்மலு நாயுடு, 1878-ஆம் ஆண்டில் சேலம் நகரிலிருந்து ‘தேசாபிமானி’ என்ற பத்திரிகையைத் தமிழில் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கச் சம்பவமாகும்.

கோயம்புத்துர் நகரிலிருந்து ‘கலாநிதி’ என்ற வாரம் இருமுறை வெளிவரும் பத்திரிகையை 1881-ஆம் ஆண்டில் வெளி வந்தது. இந்த இதழ்தான் முதன்முதல் வாரம் இரண்டு முறை வெளிவந்த முதல் பத்திரிகை என்பதும் மறக்க முடியாத பத்திரிகைக் குறிப்பாகும்.