பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

விடுதலைப் போரில் தமிழ் பத்திரிகைகள்


 விற்பனையையும், தேசிய சொரணையையும் உருவாக்கியது. மக்கள் அவரது எழுத்துக்களால் உணர்ச்சி பெற்று விடுதலை வீரர்களானார்கள் என்பது உண்மையுள் உண்மை ஆகும். ஏறக்குறைய நான்கு ஆண்டு காலம் ‘இந்தியா’ என்ற திங்கள் இதழை நடத்தினார். இந்தியாவின் ஒரு மாநிலமாக இருந்த வங்காளத்தைப் பிரிட்டிஷார் பிரித்தபோது, இந்தியாவே கொந்தளித்து எழுந்தது. பாரதியார் தீவிரவாத உணர்வுடைய பாலகங்காதர திலகருடன் சேர்ந்துக் கொண்டு, அவரது கருத்தை ஏற்று, வெள்ளை ஏகாதிபத்தியத்தின் வேரறுக்கும் எழுத்துப் பணியில் ஈடுபட்டார். அதனால் மக்கள் இடையே பாரதி ஒரு தேசிய கவி என்ற பெருமையைப் பெற்றார்.

இந்தியா மாத ஏட்டில் 10.4.1909-ஆம் ஆண்டன்று ‘தேச பக்தி’ என்ற தலைப்பிட்டுக் எழுதியக் கட்டுரையில், ‘பாரத் தேசத்து முப்பது கோடி ஜனங்களுக்குத் தொண்டு செய்வதைவிடச் சிறந்த மதம் வேறு கிடையாது’ என்ற விவேகானந்தர் அடிகளின் தேசப் பற்றுக் கருத்தை எதிரொலித்து, துருவன், பிரகலாதன் முதலியோர் விஷ்ணுவிடத்தில் செலுத்திய பக்தியை நாம் நம் ஸ்வதேசத்தினிடத்திலே செலுத்த வேண்டும்’ என்று பாரதியார் எழுதினார்.

மக்கள் கவி பாரதி, வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்து தமிழில் கவிதைகள் எழுதியிருந்தாலும், ‘பாலபாரதி’ என்றதோர் வாரப் பத்திரிகையை அவர் இங்லீஷ் மொழியில் நடத்தினார்.

விடுதலைக் கவிஞர் பாரதியாரின் வெள்ளையர் ஆட்சி எதிர்ப்பு விமர்சனக் கட்டுரைகள், மக்களது விழிப்புணர்வுகளைத் தட்டி எழுப்பி விரைவுபடுத்தும் அக்னிக் கோள்களாக அமைந்தன.

காங்கிரஸ் ஓர் ஆலயத்தைப் போன்றது. என்ன வரினும் நாம் அதைப் பாதுக்காக்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய இயக்கத்தில் தீவிரமாக இருந்த கிருஷ்ணசாமி ஐயர், 1909ல் பிரிட்டிஷ் அரசின் கீழ் நீதிபதி பதவியை லஞ்சம் போல் ஏற்றதைப் பாரதியார் மிக வன்மையாகக் கண்டித்தார்.