பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

113



பணப் பற்றாக்குறை காரணமாக, நெருக்கடிகள் அதிகமாக அவரை நெருக்கவே 1910-ஆம் ஆண்டில் அவர் திரும்பவும் சென்னை நகர் திரும்பி ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் பணியாற்றினார். பாவம், தனது 39-வது வயதில் யானை அவருக்கு எமனானாதல் மாண்டார். ஆனால், மகாகவி பாரதியார் பத்திரிகைக்கு ஆற்றியுள்ள பணிகளின் அருமைகளை, அஞ்சாமையை, அவரால் உருவான பெருமைகளை நம்மால் மறக்க முடியாதவை ஆகும்.

“ஞானபானு” ஆசிரியர்

சுப்பிரமணிய சிவா!

இந்திய விடுதலைப் போரில் தமிழ்நாட்டின் செருமுனைச் செங்களத்தில் வெங்களம் கண்ட கொள்கைப் போர்வீரன் சுப்பிரமணிய சிவா. கப்பலோட்டிய தமிழ்ர் வ.உ.சி.யின் கெழுதகைக் கொள்கை நண்பர். திடகாத்திரமான வாலிப செம்மேனி பளபளக்க சிறை சென்ற விடுதலைக் களச்செம்மல் சிவா; குட்ட நோயோடும் கை, கால்களில் பெரும் புண்களோடும், ரத்தம், சீழ்வடியும் ரணகள வடுக்களோடும். தடியூன்றிய வயோதிகத் தோற்றத்தோடும், பாப்பாரப் பட்டி எனும் கிராம வீதிகளிலே அலைந்து வேதனைப்பட்ட தியாகி அவர்.

காசியிலே இருந்து இராமேஸ்வரத்திற்கும்; இராமேஸ்வரத்திலிருந்து கைலாச நாதர் பெருமான் வீற்றிருக்கும் கைலாயத்திற்கும் புனித ஆன்மிகப் பயணம் போகும் பக்தகோடி யாத்ரிகர்களைப் போல, இந்தியா முழுவதிலும் உள்ள தேசிய காங்கிரஸ் இயக்கவாதிகள் அனைவரும் தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டிக் கிராமத்திற்கு புனிதப் பயணம் வந்து, அங்கு தன்னால் எழுப்பப்படும் பாரத மாதா கோயிலைத் தரிசிக்க வேண்டும் என்று அவாவுற்று, பாரத மாதா திருக் கோவிலைக் கட்டி முடித்திட பாப்பாரப்பட்டி எனும் ஊரில் ஐந்தாறு ஏக்கர் நிலத்தை மக்களிடம் இலவசமாகப் பெற்று, அதை அப்படியே கரம்பாகப் போட்டு விட்டே செத்துப்போன உண்மையான ஒரு காங்கிரஸ் தியாகி. திலகர் அரசியலின் தீவிர வாதத் தொண்டர்! மிகச் சிறந்த கோடை இடி பேச்சாளரும் ஆவார்.