பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

117



காந்தியடிகளால் நடத்தப்பட்ட ஒத்துழையாமைப் போராட்டத்தைத் தடுத்திட, ஆங்கிலேயே ஆட்சி மகாகனம் சீனிவாச சாஸ்திரியாரை ஓர் அணையாகப் பயன்படுத்தியது. அதைக் கண்ட டாக்டர் நாயுடு ‘ஜிண்டான் சாஸ்திரி’ என்று தலைப்பிட்டு, ஒரு கட்டுரையை எழுதினார். அந்தக் கட்டுரையில் ஆட்சியை எதிர்க்கும் குத்தலும் குடைச்சலும், கொள்கை உணர்வும் எப்படி இருந்தது என்பதை இதோ படித்துப் பாருங்கள் :-

‘வயிற்றில் ஏற்பட்ட கோளாறு வாயில் நாற்றத்தை உண்டாக்குவதை மாற்ற, ‘ஜிண்டான்’ என்ற மாத்திரையை உட்கொள்வதைப் போல, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது வயிற்றுக் கோளாற்றை மறைத்து, வெளிப் பகட்டைக் காத்துக் கொள்வதற்கு, சாஸ்திரியைப் பயன்படுத்துகிறது என்று இடித்துக் கூறினார்’ என்று தேசியம் வளர்த்த தமிழ் என்ற நூலுள் கா. திரவியம், ஐ.ஏ.எஸ். என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு பத்திரிகையின் தமிழ்நடை வேகமாகவும், படிப்போர்க்கு விறுவிறுப்பாகவும் அமைந்த பத்திரிகையாகப் பணிபுரிந்தது. டாக்டர் வரதராசுலு நாயுடுவின் எழுத்து, கருத்து எழுத்தாளர்கட்கே ஒரு பயிற்சிக் கூடமாக விளங்கியது.

பதட்டமில்லாத, ஆனால் பார்வையைக் கவரும் தலைப்புகள், அத்துமீறாத, அழுத்தமாகக் கருத்த வெளியிடும் குறிப்புகள், நிதானம் இழக்காத, நேர்மையான எண்ணங்களை எடுத்துரைத்த கட்டுரைகள், பண்பு தவறாமல், பலமாகக் கொள்கைப் பரப்பிய தலையங்கங்கள் ஆகியவை டாக்டர் வரதராசுலு நடத்திய ‘தமிழ்நாடு’ நாளேட்டின் சிறப்பான முத்திரைகள்’ என்று கா. திரவியம், ஐ.ஏ.எஸ். குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மரபோடு ஒட்டிய சொற்களைப் பயன்படுத்த வேண்டுமென்பது அவரது தமிழ் ஆர்வமாகும். எடுத்துக் காட்டாக Water - Falls என்ற இங்லீஷ் மொழிச் சொல்லை டாக்டர் மொழி பெயர்த்தபோது, ‘நீர்வீழ்ச்சி’ என்று எழுதவில்லை. இன்றும் பலர் மேற்கண்ட சொல்லையே பயன் படுத்தி மொழி பெயர்க்கின்றார்கள்.