பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

119


அவரால் எழுதப்பட்ட தலையங்கங்களை, ‘இந்து’ இதழும், ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையும் வாரந்தோறும் அவரவர் ஏடுகளிலே அவற்றை வெளியிடும் என்றால்; டாக்டரது எழுத்துக்களை எவ்வாறு போற்றலாம் கூறுங்கள்?

டாக்டர் கருத்துக்கள் மக்களிடம் எந்த அளவுக்குச் செல்வாக்குப் பெற்றதோ அந்த அளவுக்கும் மேலாக ஆள்வோரிடமும் ஆத்திரத்தை, எரிச்சலை, கோபத்தை, வஞ்சகத்தை மூட்டினவாம்.

டாக்டர் நடத்திய பிரபஞ்ச மித்திரன் பத்திரிகைக்கு ஆயிரம் ரூபாய் முன் ஜாமீன் கட்ட வேண்டும் என்று ஆங்கிலேயர் ஆட்சி ஆணையிட்டது. அக்காலத்தில் 1000 ரூபாய் என்றால் சாமான்யமா என்ன?

அதற்குக் காரணம், டாக்டர் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரை ராஜத்துரோகமாக இருந்ததாம். அதனால் 1000 ரூபாய் ஈடுகாணம் தொகையாகக் கட்ட வேண்டும் என்றது அரசு

இந்த ராஜத்துரோகக் கருத்துக்காக 1921-ஆம் ஆண்டில் அரசு டாக்டர் மீது வழக்குத் தொடுத்தது. காந்தி அடிகளின் கொள்கைக்கேற்ப டாக்டர் அந்த வழக்கை எதிர்த்து எதிர் வழக்காட மறுத்து விட்டார். அதனால், டாக்டர் ஒன்பது மாதம் சிறைத் தண்டனை பெற்றார்:

அரசியலில் மட்டுமா டாக்டர் இத்தகையப் புரட்சிகளைப் பத்திரிகை மூலமாகச் செய்தார்? சமுதாயத் துறையிலும்தான் செய்தார்!

கோவிலில் பொட்டு கட்டி விடும் தேவதாசி முறை ஒழிப்பைக் காங்கிரஸ்காரர்களே எதிர்த்தார்கள். ஆனால், டாக்டர் நாயுடு, தனது தமிழ்நாடு பத்திரிகையின் முழு மக்கள் பலத்தைக் கொண்டு அந்த முறையை எதிர்த்தார்.

இந்து அறநிலையக் குழுவும், சில தேசியப் பத்திரிகைகளும், காங்கிரஸ்காரர்களும் ஒன்று சேர்ந்து மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்டும் ஊழல் போக்குகளைத் தமிழ்நாடு பத்திரிகை வாயிலாக எதிர்த்து நாயுடு எழுதினார்.