பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

சுதந்தர இயக்கத்தில் இருபதாம் நூற்றாண்டு இதழ்கள்




சென்னை ஜி. சுப்பிரமணிய ஐயரும், சேலம். விசயராகவாச்சாரியாரும் இணைந்து, ‘இந்து’ நாளேட்டையும், ‘சுதேசமித்திரன்’ வார, தின இதழ்களையும் தமிழ்நாட்டில் துவக்கிக் கொள்கைப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்ததற்குப் பிறகுதான், மக்கள் காங்கிரஸ் பேரியக்கம் பற்றிப் புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் வாய்த்தன.

இந் நிலைக்குப் பிறகு, இருபதாம் நூற்றாண்டில் இந்திய விடுதலை இயக்கத்தில், வட நாட்டிலும் - தென்னாட்டிலும் பத்திரிகைகள் பல ஆரம்பிக்கப்பட்டு, அவை தீவிரமாகக் கொள்கைப் போர் நடத்தும் நிலை உருவானது. அதனால், இந்திய இதழ்களின் வளர்ச்சிக்கும் ஓர் உத்வேகம், பரபரப்பு, விறுவிறுப்பு, சுறுசுறுப்பு ஆகியவை மக்கள் இடையே தீவிரமடைந்தன.

இந்தத் தீவிர உணர்ச்சிகளை அப்போதையக் காங்கிரஸ் இயக்கத் தலைவர்கள் ஒன்று திரட்டி, பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராகப் போராடத் திட்டம் வகுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள்.

மாராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த விஷ்ணு கிருஷ்ண சிப் லாங்கர் என்பவர் மராட்டிய மொழியில் கேசரி (Kesari) என்ற பத்திரிகையையும், இங்லீஷில் ‘மராட்டா’ (Mahratta) எனும் இதழையும் துவக்கி நடத்தினார். இந்தப் பத்திரிகைகளைத்தான் பிற்காலத்தில் பால கங்காதர திலகர் எனும் மராட்டியத் தலைவர் ஏற்று நடத்தினார்.

பம்பாய் நகரில் பல ஆண்டுகளாக நீதித் துறையில் பணியாற்றிய நீதிபதி மகாதேவ கோவிந்த ரானடே விருப்பத்திற்கேற்ப 1887-ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியடிகளின் அரசியல் ஆசானான பாரிஸ்டர் கோபால கிருஷ்ண கோகலே என்ற மிதவாதக் காங்கிரஸ் இயக்க அணியின் தலைவர் ஆசிரியராக அமர்ந்து ‘சர்வ ஜன சபை’ (Sarva Jana Sabha) என்ற ஆண்டுக்கு நான்கு முறை வெளிவரும் காலாண்டு பத்திரிகையை நடத்தினார்.