பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

சுதந்தர இயக்கத்தில் இருபதாம் நூற்றாண்டு இதழ்கள்


குறிப்பிடும்போது, “அடக்கப்பட்ட உணர்ச்சிகளோடு பத்திரிகைகளை நடத்துவதைவிட அவற்றை வெளியிடாமலே இருப்பது நல்லது” என்று குறிப்பிட்ட உணர்ச்சி, இளம் பத்திரிகையாளர்களுக்கான ஓர் அறிவுரை ஆகும்.

காந்தியடிகள் பத்திரிகை ஆசிரியரான பிறகு, அவரைப் பின்பற்றி, சுவடுகள் மாறாமல் பல பத்திரிகைகள் வட இந்தியாவிலும், தென் இந்தியாவிலும் வெளிவந்து, அண்ணலின் அறப்போர்களுக்கும், விடுதலைப் போர் இலட்சியங்களுக்கும் பேருதவிகளாக, படைக் கலன்களாக, பிரச்சாரக் கருவிகளாக, போராட்ட முரசுகளாக, அறிக்கை வலம்புரி சங்குகளாக ஒலி எழுப்பின! நாட்டை விழிப்புறச் செய்தன! சுதந்திர ஊது குழல்களாக அலைஓசை, எழுப்பின எனலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, விடுதலைப் போரின் வெற்றிச் சிகரமாக, அண்ணல் காந்தியடிகளின் அரசியல் வாழ்வின், இறுதிக் கட்ட போர் முரசாக, அதாவது ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்கும் அடிமை இந்தியர்களுக்கும் இடையிலே நடைபெற்ற குருக்ஷேத்திரப் போர் முனையாக, 1942-ஆம் ஆண்டில், ‘வெள்ளையனே வெளியேறு’ (Quit india) என்ற போர்க் களம் அமைந்ததை உலகமே உணரும்.

அத்தகையப் போர் முனையின் வெங்களத்தில் பத்திரிகைகள் பல செங்களமாடிடும் எழுத்துக்களை அக்கினி அம்புகளாக எய்தன. துள்ளிச் சென்ற விடுதலைப் போர் போராட்ட வேல்கள், வெள்ளையர் ஆணவ வேர்களை வெட்டி வீழ்த்திப் பகையை அள்ளி அள்ளிக் குவித்தன.

எனவே, விடுதலைப் போர்க் காலத்தில் இந்தியா முழுவதும் நடைபெற்று வந்த பத்திரிகைகள் எல்லாம் ஆற்றிய பங்குகளை ஒரு தனி வரலாறாக எழுதலாம். அவ்வளவு அற்புதங்களை நமது பத்திரிகையாளர்கள் ஆற்றி உள்ளார்கள். அந்த உண்மைகள் உலக விடுதலை இயக்கங்களுக்குரிய அரிச்சுவடிகளாகும்!