பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்


 என்ற சான்றே தமிழ் வரலாற்றில் இல்லை. திராவிடரியக்கத் தமிழ்க் கவிதையின் வரலாற்றுப் பெருமைக்கு அரசியல் வண்ணம் கொடுத்த வழி காட்டிக் கவிஞராக வாழ்ந்து மறைந்தார். பாவேந்தர் கவிதை வட்டத்துப் புள்ளிகளுள் ஒருவராகத் திகழ்ந்த அவர்; சென்னை மாநகராட்சி மேனிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணி புரிந்தார் என்பதைக் கவிதை உலகமும், திராவிடரியக்க வரலாறும் மறவாது.

‘நம்நாடு’

நாளேடு

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பும் நாளேடு இது. அண்ணாவை ஆசிரியராகக் கொண்டு, சென்னை இராயபுரம் பகுதியிலே இருந்து வெளி வந்தது. இந்த தி.மு.க. தினசரி இதழில் நம்நாடு செங்குட்டுவன், நம்நாடு முத்துக் கிருஷ்ணன் போன்ற மற்றும் சிலர் துணை ஆசிரியர்களாகப் பணியாற்றி, திராவிடரியக்க வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டார்கள்.

அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன், என்.வி. நடராசன் போன்ற பலர் பேச்சுக்களும், கழகப் பணி முழு விவரங்களும் வெளிவந்தக் கழக நாளேடு அது.

தூத்துக்குடி

‘கிளர்ச்சி’ இதழ்

திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி நகரிலிருந்து திராவிடரியக்க வார இதழாக ‘கிளர்ச்சி’ வெளி வந்தது. அதன் ஆசிரியர்களான இராசு. தங்கப்பழம், எம்.எஸ். சிவசாமி என்ற இரட்டையர்கள் அப்பத்திரிகையை நடத்தி, எதிர்ப்புக் குரல் எழுப்பும் மாற்றுக்கட்சிகளுக்கு மறுப்புக் குரல் கொடுத்துக் கிளர்ச்சி செய்தது அந்தப் பத்திரிகை.

விபூதி வீரமுத்து என்பவர் நடத்திய ‘அறப்போர்’ என்ற காங்கிரஸ் பத்திரிகைக்கு, ‘கிளர்ச்சி’ இதழ் இரட்டையர்கள் காரசாரமாகப் பதில் எழுதிய எதிர்ப்பு வாதங்களை திராவிடரியக்கம் மறவாது.