பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

177



அடியாரின்

‘மறவன் மடல்’

கலைஞர் ‘முரசொலி’ நாளேட்டில் துணையாசிரியராக இருந்த திருப்பூர் தண்டபாணி என்ற அடியார், ‘மறவன் மடல்’ என்ற பத்திரிகையை நடத்தினார்! சிறந்த சிந்தனை வளமிக்க எழுத்தாளரான அடியார்; கடலலை போன்ற அலைமோதும் அரசியல் நிலையற்றக் கருத்துக்களால் அதை நடத்த முடியாதவராகி, இறுதியில் இஸ்லாம் இனமாகி, பாகிஸ்தான் அதிபரை நேரில் சந்தித்துப் புகழ் பெற்ற எழுத்தாளராக மறைந்தார்!

‘மன்ற முரசு’

முசிறிபுத்தன்

ஆரம்ப கால திராவிடரியக்கத் தொண்டராக இருந்து, பிறகு இரும்பு வணிகம் செய்து, ஓரளவு வருமானம் உடையவராக விளங்கினார். புரட்சி நடிகர் திரை ரசிக மன்றங்கள் ஒன்றாக இணைந்ததால் அதன் பொதுச் செயலாளராகப் பணியாற்றி புகழ் பெற்றார். எம்.ஜி.ஆர். புதுக் கட்சியைத் தோற்றுவித்தபோது, அவர் பின்னே சென்று ரசிக மன்றத்தை நிலை நாட்டினார். சட்டமன்ற உறுப்பினராகவும், தொண்டு செய்தார். அவர் ‘மன்ற முரசு’ என்ற நாளேட்டை நடத்தி நல்ல முறையில் வருமானியனார்! எம்.ஜி.ஆர். அரசியல் வளர்ச்சிக்கு பலமான துணையாக நின்றவர்களிலே ஒருவரானார்.

திருநாவுக்கரசர்

‘பொன்மனம்’

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் வழக்குரைஞராக திராவிடர் இயக்கத் தொண்டாற்றி வந்த திருநாவுக்கரசு, மக்கள் திலகம் கட்சி சார்பாக அறந்தாங்கித் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அமைச்சராகவும் நீடித்தார். அவர், ‘பொன்மனம்’ என்ற பத்திரிகையை நாளேடாக நடத்தினார். ஜெயலலிதா மந்திரிசபையிலும் அமைச்சராக இருந்தார். பிறகு தனிக்கட்சி கண்டார்! அதை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துவிட்டு, பிரதமர் வாஜ்பாய் தலைமையில் இயங்கிய மத்திய அரசு மந்திரியாக இருந்தார். ‘பொன்மனம்’ இதழும் நின்று விட்டது.