பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

பத்திரிகை ஓர் அறிமுகம்


சொல்லுக்கு அறிஞர்கள், அறிவர்கள், புலவர்கள், மேதைகள், மாயாவிகள் என்ற பல பொருட்கள் உள்ளன.

மேற்கண்ட பொருட்களுக்குரிய மேன்மக்களது அறிவைப் போற்றுவதும், ஏற்பதும், புகழ்வதும், பாராட்டுவதும், மாயாவி போல மக்கள் இடையே காட்சிப் பொருளாய் மாறிமாறி அற்புதங்களை ஆற்றுவதும், பரப்புவதும் போல, மேகசின்கள் ஒவ்வொன்றும் - அதனதன் பருவக் கூறுகளுக்கு ஏற்ப அந்தப் பத்திரிகைகளும் அரும்பாடுபட்டு உழைப்பவை என்பதால் - அவற்றுக்கு ‘மேகசின்’ என்று மேல் நாட்டார் பெயரிட்டார்கள்.

எப்போதும் வடதிசையினையே காட்டும் மேக்நெட்டிக் காந்த ஊசி முனை போல, மேகசின் என்கின்ற பருவ கால பத்திரிகைகளும், எப்பொழுதும் மக்கள் நலன் மீதும் அவர்களிடம் அறிவொளியை இயக்குவதிலுமே அவை நாட்டமாக நடமாடும் ஏடுகளாகும்.

அந்த ஏடுகள் அவ்வாறு தங்களது பருவ கால எழிலோடு இயங்கும்போதுதான் - அவற்றின் அழகுகள், கவர்ச்சிகள், செய்திகளின் வசிய வித்தைகள், மனித அறிவைப் பற்றும் காந்தக் கல் அற்புதங்களாக இயங்குகின்றன. இன்றும் பல பருவ ஏடுகள் அந்த அழகு மேனிக் கவர்ச்சிக் கலை நயங்களோடு இயங்கிக் கொண்டிருப்பதையும் நாம் பார்க்கின்றோம் இல்லையா?

எடுத்துக்காட்டாக பொள்ளாச்சித் தொழிலதிபர் திரு. நா. மகாலிங்கம் நிறுவனத்திலிருந்து வெளிவரும் ஓம் சக்தி, கோவை கலைக்கதிர், கலைமகள், அமுத சுரபி, உண்மை, தாமரை, முத்தாரம் போன்ற சில பருவ இதழ்களைக் கூறலாம்.

பத்திரிகைத்
துறை பணிகள்

மனித சமுதாயத்தின் இடைக் காலந்தொட்டு இன்று வரையிலும், மக்களது உணர்ச்சிப் பெருக்காக, கொந்தளித்தோடும் எண்ணப் பிரவாகமே பத்திரிகை!

மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளை, அரசியல் கலையை, பண்பாட்டை, நாகரிகத்தை, கல்வியியலை,