பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

189


பதிப்பாசிரியர் ஆற்றுகின்ற பணிகள் மீது உரிமையாளர்கள் குறுக்கீடுகள் எதுவும் இருக்கக் கூடாது. குழலிசை வாணர்களுக்குப் பணம் கொடுக்கலாம். ஆனால், இந்தப் பாட்டுதான் பாட வேண்டும் என்று கட்டளை போடக் கூடாது (The piper may be paid - but the tune must not be dictated) என்று கூறினார் அவர்.

டாக்டர் ஏ. இராமசாமி அவர்கள், 1957-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் செங்கற்பட்டு நாடாளுமன்ற தொகுதியில், தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட பாரிஸ்டர் ஏ. கிருஷ்ணசாமியை ஆதரித்தும், காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட ஒ.வி. அழகேச முதலியாரை எதிர்த்தும் தேர்தலில் பேசுவதற்கு செல்ல நேரிட்டது.

அந்த எம்.பி. தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் சட்ட மன்ற தொகுதியில் முதன் முதலாக அறிஞர் அண்ணா போட்டி யிடுகிறார். அந்தத் தேர்தலில்தான், ‘அரியலூர் ரயில் விபத்தை யும், அதனால் மக்கள் மாண்டதையும் சுட்டிக் காட்டி மக்களிடம் வாக்குகள் கேட்கும் வகையில், ‘அரியலூர் அழகேசரே ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா?’ என்ற சுவரொட்டிப் போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது.

அரசியல் மேதை டாக்டர் ஏ. இராமசாமி அவர்கள் சொற் பொழிவைக் கேட்க மக்கள் வெள்ளம்போல திரண்டிருந் தார்கள். அந்தக் கூட்டத்தில் ஆர்க்காட்டார் இங்லிஷில் ஆற்றொழுக்காக, அற்புதமாக உரையாற்றியதை அறிஞர் அண்ணா அவர்கள் மொழி பெயர்த்தார். 1935-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் தனது கல்வியை முடித்த பின்பு டாக்டர் சர்.ஏ. இராமசாமி முதலியார் உரைகளின் மொழிப் பெயர்ப்பாளராகவே தமிழ்நாட்டு அரசியலில் முதன் முதலாகக் காலடி வைத்தவர்.

ஆர்க்காட்டார் அண்ணாவிடம் அன்பும், மரியாதையும் அளவிற்கதிகமாகவே பாராட்டினார். அண்ணாவும் அவரைத் தனது அரசியல் ஆசானாகவே இறுதிவரை மதித்தார். அண்ணா 1967-ல் தமிழ்நாட்டு முதல் அமைச்சர் ஆனபோது, டாக்டர் ஏ.ஆர். முதலியார் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்து மாலை சூட்டி அவருக்குத் தனது நன்றியை உணர்த்தினார்.