பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

தற்கால - கட்சி சார்பற்ற தமிழ்ப் பத்திரிகைகள்



தினத்தந்திக்கென்று அவர் ஒரு பாமரர் தமிழை உருவாக்கிய சிற்பியாகத் திகழ்ந்தார்! மக்கள் பேசும் தமிழில் கொச்சை ஒலி நீக்கி எழுதுவதுதான் ‘தினத்தந்தி’ தமிழ் என்பதை அவர் நிரூபித்துக் காட்டினார். தினந்தோறும் காலையில் பல லட்சம் மக்களுடன் அவர் தினத்திந்தி மூலமாகப் பேசும் வியாபார விற்பனைத் தொடர்பை உருவாக்கிக் காட்டினார். ஏழை மக்கள் அனைவரும் எழுத்துக் கூட்டியாவது தினத் தந்தி நாளிதழைப் படிக்க வைக்க வேண்டும் என்ற செயற்கரிய முயற்சியை அவர் செய்துகாட்டி; அனைவரையும் அந்தப் பத்திரிகையை வாங்கிப் படிக்க வைத்தவர் ஆதித்தனார்!

“இலக்கியம் படிக்க ஆசைப்படுபவன் ‘தினமணி’ படிக்கட்டும்! அன்றாட வாழ்க்கை இலக்கியம் படிக்க நினைக்கும் பாமரன் ‘தந்தி’ வாங்கிப் படிக்கட்டுமே” என்ற சிந்தனையிலே வெற்றி பெற்றவர் ஆதித்தனார்.

‘தினத்தந்தி’ வெற்றிச் சிகரத்தின் ஒளி விளக்கான பிறகு, அதே ஏழை பாமரர்களை மாலையிலேயும் படிக்க வைக்கும் பத்திரிகை வேட்கையை ‘மாலைமுரசு’ என்ற நாளேடு மூலம் உருவாக்கி, அதிலும் அவர் வெற்றி பெற்றார்.

நாளேடுகளில் அரிய பெரிய வெற்றி பெற்ற ஆதித்தனார், ‘வாராந்தரி ராணி என்ற வாரப் பத்திரிகையைத் துவக்கி, அதைக் குடும்பம் குடும்பமாகத் தமிழ் மக்கள் வாங்கிப் படிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிவிட்டார்.

நாளாயிற்று, வாரமாயிற்று, மாதாந்திற்குரிய கல்வித் தொண்டு ஏதாவது செய்ய வேண்டாமா? என்ற சிந்தனைக் கனியாகப் பழுத்ததுதான் ‘இராணிமுத்து’ என்ற அவரது திங்கள் கதை வெளியீடுகள்!

இவ்வாறு தமிழ் நாட்டு மக்களைத் தினந்தோறும் காலையிலும் - மாலையிலும் வார, தினங்களிலும், மாத நாட்களிலும் பத்திரிகைகள் வாயிலாக வாழ்க்கைச் செய்திகளைப் படிக்க வைத்த பத்திரிகையாளர் யார்? ‘நாம் - தமிழர்’ என்ற பாசபந்த உறவை நாட்டிய ஆதித்தனாரைத் தவிர?