பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

தற்கால - கட்சி சார்பற்ற தமிழ்ப் பத்திரிகைகள்


சங்கம் நடத்தும் பத்திரிகை என்பதற்கேற்ப, அதன் இதழ்கள் அறிவொளியைப் பரப்புகின்றன.

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கப் பணிகளை, தலைமை நிலையப் பொறுப்பாளராக அமர்ந்து ஆற்றிவரும் சகோதரி வளர்மதி - பத்திரிகை வளர்ச்சிக்குரிய பணிகளையும் செய்து வருகிறார்.

‘தமிழ் மூவேந்தர்’

“முரசு’’ மாத இதழ்

‘இலக்கியச் சுடர்’ மூவேந்தர் முத்து, நடத்திவரும் இலக்கியத் திங்கள் இதழ் ‘தமிழ் மூவேந்தர் முரசு’. அந்த பத்திரிகைக்கு ‘கலைமாமணி’ பேராசிரியர் சிலம்பொலி சு.செல்லப்பனார் சிறப்பாசிரியராகவும், ‘இலக்கியச் சுடர்’ மூவேந்தர் முத்து ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்கள் என்றால்; அதன் இலக்கியச் சேவைகள் எவ்வாறு இயங்கும் என்பதைக் கூறவும் வேண்டுமோ!

தமிழ் மொழிக்காக அரும்பாடுபட்டு மறைந்த அரிய அறிஞர்களுக்கு அஞ்சலி செலுத்திடும் தமிழ்ப் பண்புணர்வுகளை; ஆண்டாண்டு தோறும் ஆறு ஆண்டுகளாகத் தமிழ் மக்களுக்கு முரசறைந்து நினைவூட்டி வருகிறது மூவேந்தர் முரசு! பாவேந்தர் விழா, திரு.வி.க. விழா, அ.ச.ஞானசம்பந்தர் விழா நூல் பதிப்புச் செம்மல்கள் விழா, தமிழ்த் தொண்டர் ஆர்.எம்.வீரப்பன் பிறந்த நாள் விழா, கவிஞர் கண்ணதாசன் பவள விழா; பாவாணர் நூற்றாண்டு விழா, அறிஞர் அண்ணா நினைவலைகளது சம்பவங்கள், மேல் நாடுகளில் நடைபெறும் தமிழ்க் கலைவிழா, கவிதை இனங்களுக்குத் தக்காரைக் கொண்டு தொண்டாற்றும் வித்தகப் பண்பு, வாழ்க்கைக்குரிய மருத்துவக் குறிப்புகள் போன்ற பல தமிழ் உணர்ச்சிகளை மூவேந்தர் முரசு வாயிலாக நினைவொலிகள் எழுப்பி, மற்ற பத்திரிகைகளுக்கும், மக்களுக்கும் தமிழ்ப் பணி சேவை உணர்வுகள் மூலமாகத் தொண்டு புரிகின்றது.