பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

215



“பத்திரிகை நடத்துவோர் தங்களது விற்பனை இதழ்களின் அஞ்சல் தலைக்குரிய பாதுகாப்புக் கட்டணத்தைக் காப்பீட்டுத் தொகையாகக் கட்ட வேண்டும்” என்பதுதான் அந்தப் புது சட்டம்.

பணம் இருப்பவர்கள் டல்ஹெளசி உத்தரவைக் கண்டு அஞ்சாமல் காப்பீட்டுத் தொகையைக் கட்டினார்கள்! பணமற்ற சாதாரண பத்திரிகைகளால் அந்தத் தொகையைக் கட்ட முடியவில்லை. அவர்களை அரசு அதிகாரிகள் வற்புறுத்திக் கட்ட வைத்தார்கள். அதற்குப் பிறகும் கட்ட முடியாதவர்களது பத்திரிகைகளை அஞ்சலகத்தார் கண்டிப்பான செயலோடு வெளியூர்களுக்கு அனுப்ப ஏற்க மறுத்து விட்டார்கள்.

டல்ஹெளசியின் இந்த புதிய சட்டம், பத்திரிகையாளர்களை வளர விடவில்லை. ஈரத் துணியைக் கட்டி கழுத்தை அறுப்பவனது இரக்கமற்றச் செயல் போல இருந்தது - அஞ்சலகக் காப்பீட்டுத் தொகைக் கட்டணச் சட்டம்!

4. ஆடம்ஸ் ஒழுங்கு முறைச் சட்டம்
(ADAMS REGULATION ACT - 1823)

வங்க மொழி வித்தகர் மட்டுமன்று, ஈரேழ் மொழிகளிலே புலமையாளரான இராஜாராம் மோகன்ராய், ‘சம்பத் கெளமதி’, மீரட் அல்-அக்பர் என்ற வங்க, பாரசீக மொழிகளிலே பத்திரிகைகளை நடத்திய மாமேதை ஆவார்.

அந்த பன்மொழி வித்தகர் நடத்திய தனது பத்திரிகைகளில் எழுதிய தலையங்கப் பகுதிக் கருத்துக்களை அடக்கிட, ஆங்கிலேய ஆட்சி கொண்டு வந்த அடக்குமுறைச் சட்டம்தான் இந்த ஆடம்ஸ் ஒழுங்கு முறைச் சட்டம். இந்தச் சட்டத்தை டல்ஹெளசி பிரபு 1823-ஆம் ஆண்டில் கொண்டு வந்து கடுமையாக அம்ல் படுத்தினார்.

இராஜாராம் மோகன்ராய், ஆங்கிலேயரின் கிழக்கு இந்திய வியாபாரக் கம்பெனியில் பணியாற்றிய நற்புகழாளராவார். அப்படிப்பட்டவர் மீதுதான் ஆங்கிலேயர் ஆட்சி ஏவியது அடக்குமுறைச் சட்டத்தை!