பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

217



செய்தித்தாள் பதிவுச் சட்டத்தின்படி பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில், அதை அச்சிடும் அச்சகத்தாரும், பத்திரிகையை நடத்துவாரும், அவரவர் முழு பெயர்களையும், அச்சகம் இயங்கும் இட முகவரியையும், பத்திரிகை உரிமையாளர், அதை வெளியிடும் இடத்தின் முகவரியையும் முழுமையாக வெளியிடப்பட வேண்டும்.

வெளியிட மறந்தால், தவறினால் 5000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். சிறை தண்டனை உண்டா? உண்டு! இரண்டு ஆண்டு!!

6. 1857- ல் வந்த - வாய் பூட்டுச் சட்டம்!
(இதழ், சட்ட எண்:15)

இந்தியாவில் நடைபெற்ற இந்து - முஸ்லீம் இணைந்த ஆங்கிலேயர் ஆட்சி எதிர்ப்புப் போரை இந்திய வரலாற்றாசிரியர்கள் “இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்” என்று பெயரிட்டு எழுதினார்கள். ஆனால், ஆங்கிலேய வரலாற்றாசிரியர்களும் அவர்களது வெறி ஆட்சியும் அந்தப் போரை, போராகக் கருதாமல், சிப்பாய்க் கலகம் என்று குறிப்பிட்டு ஆணவமாடினார்கள்.

ஏன் இந்தப் போர் நிலை சிப்பாய்கள் இடையே மூண்டது? இங்லீஷ் ஆட்சியினர்; இந்துமத - இஸ்லாம் மத சுதந்திரங்களை, உரிமைகளை அசிங்கப்படுத்துகிறார்கள், அவமானப் படுத்துகிறார்கள். இப்படியே அந்த உணர்வை வளரவிட்டால் மத சுதந்திரம்.அழிந்துவிடும் என்ற முடிவுக்கு வந்து, இணைந்து ஒற்றுமையோடுப் போரிட்டார்கள் இந்து-முஸ்லீம் இன வீரர்கள்!

இந்தியப் பத்திரிகைகள் எல்லாம், இந்த இந்து - முஸ்லீம் மத உரிமைப் போரை ஆதரித்து செய்திகளை வெளியிட்டார்கள். தலையங்கங்களை, கட்டுரைகளைப் பத்திரிகைகள் எழுதின.