பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

221


உலகின் சூழ்நிலையை எடுத்துரைத்த அவர், மன்றத்தின் ஒப்புதலையும் பெற்றுவிட்டார். அந்த ஒப்புதலுக்கேற்ப சட்டம் திருத்தப்பட்டது. என்ன அந்த சட்டத் திருத்தம்?!

பத்திரிகை நடத்துபவர்கள், ஒரு குறிப்பிட்ட பணத்தொகையை முன் ஜாமீனாக, அதாவது பிணையத் தொகையாக Deposit ஆக கட்ட வேண்டும்.

ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பும், ஆத்திரமும் பொங்குமாறு பத்திரிகையில் எழுதக் கூடாது.

இனம், மதம், சாதி, மொழிகளது பேதங்களை உண்டாக்கி, அதனால் கலவரங்களைத் தூண்டிவிடும் நோக்கங்களில் பத்திரிகைச் செய்திகளை வெளியிடக் கூடாது.

மேலே கூறப்பட்ட விதிகளை ஏற்றுக் கொண்டதாக, அச்சகத்தாரும், பத்திரிகை பதிப்பிப்போரும் நீதிபதி முன்பு அல்லது காவல்துறை அதிகாரியிடம் உறுதிமொழிப் பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும்.

அவ்வாறு ஆட்சியை எதிர்த்து எழுதினால், நீதிபதி அல்லது காவல்துறை அதிகாரிகளால் பத்திரிகைகளைப் பறிமுதல் செய்துவிடும் அதிகாரமும் அவர்களுக்கு உண்டு.

மேற்கண்டவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் எதுவாக இருந்தாலும், அவற்றை எதிர்த்து நீதியின் சந்நிதானப் படிக்கட்டுகளைக் கூட மிதிக்கக் கூடாது, அதாவது கோர்ட்டுக்குப் போக முடியாது.

இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு முதல் முறையாக எச்சரிக்கை மணி ஒலிக்கப்படும். அந்த ஓசையைக் கேட்க மறுத்ததற்கேற்ப, மீண்டும் அதே தவறைச் செய்தால், கட்டப்பட்டிருந்த முன் பணம் பறிபோகும். அதற்குப் பிறகு அபராதமும் விதிக்கப்படும். சிறை தண்டனையும் உண்டு.

லார்டு லிட்டன் பிரபுவால், இங்கிலாந்து பாராளுமன்ற ஒப்புதலோடு கொண்டு வரப்பட்ட இந்திய மொழி இதழ்ச் சட்டம், பத்திரிகை உலகுக்கு பெரும் கேடுகளை விளைவிப்பதாய் விளங்கியது.