பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

223


லட்சம் ரூபாய். அந்தக் காலத்தில் 5 லட்சம் என்றால் சாமான்யத் தொகையா அது?

11. 1910-ஆம் ஆண்டின் பத்திரிகைகள் சட்டம்
(THE PRESS Act of 1910)

அகில இந்திய தேசியக் காங்கிரஸ் பேரவையின் வளர்ச்சி நாளுக்கு நாள் ஆல்போல் தழைத்து மக்கள் மனதிலே அருகு போல வேரோடி வந்தது. இதற்குக் காரணம், ஆண்டாண்டும் இந்த பேரியக்கம் ஒவ்வொரு மாநிலத்திலும் புகழ்பெற்ற கல்விமான்களையும், வழக்குரைஞர்களையும் பல்கலை வித்தகர்களையும், தோற்றுவித்து, அவர்கள் தங்களது உடல், உயிர், உடைமை அனைத்தையும் தேசத்திற்குக் காணிக்கையாக்கவும் தயாராக இருந்த நிலைதான்!

பண்டித மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு, லாலா லஜபதி ராய், சித்த ரஞ்சன் தாஸ், சுபாஷ் சந்திர போஸ், அரவிந்தர், வீர சாவர்கர், பால கங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, இராசேந்திர பிரசாத், வல்லபபாய் படேல், டி.பிரகாசம், நீலம் சஞ்சீவரெட்டி, பெருந்தலைவர் காமராசர், இராசாசி, முத்துரங்க முதலியார், சத்தியமூர்த்தி ஐயர், குமாரசாமி ராஜா, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., ப.ஜீவானந்தம், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, சேலம் விசயராகவாசாரி, நிஜலிங்கப்பா மொரார்ஜி தேசாய் போன்ற அரும்பெரும் தியாகமணிகளது எழுத்தும், பேச்சும், உழைப்பும், சிந்தனைத் திறனும் ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பேரிடியாய் ஒலித்துக் கொண்டே இருந்தன.

அண்ணல் காந்தியடிகள், தென் ஆப்ரிக்கா வாழ் இந்தியர்களுடைய மனித உரிமைகளுக்காக, சமத்துவ வாழ்க்கைக்காகத் தென்னாப்ரிக்காவில், இதே பிரிட்டிஷ் சாம்ராச்சிய ஆணவ ஆட்சியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த நேரம்.

உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால், மத்தளத்திற்கு இரு பக்கமும், இடியாக அடிக்கும் அரசியல் நெருக்கடிகளை