பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

பத்திரிகை வளர்ச்சிகளை அழிக்கும் அடக்குமுறைச் சட்டங்கள்!


நாட்டுக்குரிய நலன்களை செய்யமுடியாமல், கேடுகளை, தீமைகளை உருவாக்கும் என்பது உறுதி.

இன்றையப் பத்திரிக்கைகள் வெளியிடும் செய்திகளில், எழுதும் கருத்துக்களில் எவை உண்மை, எவை உண்மையற்றவை என்பதை மக்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவற்றால் நாட்டிலே குழப்பங்களும், கலகங்களும், கலவரங்களும், அராஜகங்களும், அநீதிகளும் உண்டாகின்றன.

அதற்கு அடிப்படை நோக்கங்கள் என்ன? பத்திரிகையாளர்களில் பலர் ஒரு செய்தியை அவரவர் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறுவெளியிடுகின்றனர் எதற்கெடுத்தாலும், உரிமைகள், சுதந்திரம் என்று அலறிக்கொண்டு வியாபாரக் குறிக்கோள்களுடன், பண ஆசையுடன், கட்சிகள் நோக்குடன், அரசியல் லாப நட்ட பதவி வெறிப் பிடிப்புகளுடன் செய்திகளை அவரவர் கண்ணோட்டங்களுக்கேற்ப வெளியிடும் அதர்மச் செயல்களிலே ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தகையச் செய்திகளை, கருத்துக்களைப் படிக்கும் மக்களில் பலர், மிருக உணர்ச்சிகளுக்குப் பலியாகின்றார்கள். பாலுணர்ச்சிகளுக்கு இரையாகின்றார்கள். சாதி, மத, அரசியல், பொருளாதாரப் பேதக் கலகங்களுக்கு ஆட்பட்டு, அரசியல், மதவியல், சாதிவியல் கலவரங்களை உருவாக்குகின்றார்கள். மக்கள் அமைதியான வாழ்க்கையை நடத்த முடியாமல் கோப, தாப உணர்ச்சிகள் உண்டாகி அடிதடி, குத்துவெட்டு, காவல் நிலையங்களின் கோரக் கெடுபிடிச் செயல்கள், இறுதியாக நீதிமன்ற நிழலை நாடி அமைதிகாணும் களைப்பு நிலைகள் ஏற்படுகின்றன.

சுதந்திரமாக உள்ள நாடுகளானாலும், அடிமை நாடுகளானாலும், ஆங்காங்கே இத்தகையச் சம்பவங்கள் அடிக்கடி தலைவிரித்தாடுவதை நாம் பார்க்கின்றோம். அத்தகையக் காலங்களில் பத்திரிகைகளில் வரும் செய்திகளை கருத்துக்களை ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்தும் சூழ்நிலைகள் உண்டாகின்றன.