பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

பத்திரிக்கைகளைப் பாதுகாக்கும் ஃபெரோஸ் காந்தி சட்டம்!


அன்றைய முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் சிந்தனையிலே ஊடுருவியதால், ‘எரியீட்டி’ ஆசிரியர் தண்டனை பெறாமல் மீண்டார் என்பதைச் சுட்டிக் காட்டவே இங்கு அதனைக் குறிப்பிட்டோம்.

எனவே ஃபெரோஸ் காந்திச் சட்டத்தைப் பத்திரிகையாளர்களால் வாழ்த்தி வரவேற்காமல் வாழ முடியுமா? சிந்தித்துப் பாருங்கள்.

3. நீதிமன்றம் நிந்தனைக் குற்றம்

ஒரு ஜனநாயக ஆட்சிக் கோட்டையைத் தாங்கிக் கொண்டிருக்கும் நான்கு தூண்களில் மூன்றாவது தூண் நீதிமன்றம். நான்காவது தூணாக விளங்குவது பத்திரிகைத் துறை.

நீதிமன்றங்களில் நடைபெறும் முக்கியமான, மக்கள் கவனத்தை ஈர்க்கக்கூடிய, சிக்கலான, சுவையான, பொதுமக்கள் நலன்களோடு சம்பந்தமுடைய வழக்குகளின் நடவடிக்கைகளை அறிந்துகொள்வதில் மக்களும் அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள்.

அந்த ஆர்வத்தைப் பத்திரிகைகள் மக்களிடையே வளர்ப்பதின் மூலமாக - நீதிமன்றங்களின் பெருமைகளை, அரிய நிதிகளின் அருமைகளை, அவ்வப்போது எடுத்துரைக்கும் சீரிய பணிகளைப் பத்திரிகைகள் செய்கின்றன.

ஆனால் ஒன்று, நீதிமன்றங்களது வழக்கு நடவடிக்கைகளை மிகக் கவனமாக பத்திரிகைகளில் எழுதவேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றங்களை அவமதித்த குற்றத்திற்குப் பலியாவோம்.

இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் புலவர் என்.வி.கலைமணி, ‘முரசொலி’ நாளேட்டில் துணை ஆசிரியராகப் பணியாற்றியபோது, சீன ஆக்ரமிப்புபோர் நடந்த நேரத்தில், தமிழ் நாட்டில் அமைச்சராக இருந்த எம்.பக்தவச்சலத்தை எதிர்த்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சி.வி.எம்.அண்ணாமலை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றுவிட்டார்.