பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

243



தோற்றுவிட்ட் சி.வி.எம். அண்ணாமலை, முதலமைச்சர் பக்தவச்சலத்தை எதிர்த்து தேர்தல் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கு திரு மயிலையிலே உள்ள தேசிகாச்சாரி சாலையிலுள்ள ஒரு தனி பங்களாவில் திரு.சத்திய நாராயணா என்ற நீதிபதி தலைமையில் நடைபெற்றது. ஏறக்குறைய ஓராண்டுக் காலம் நடந்த அந்த வழக்கு விசாரணையையும், சென்னை சைதாப்பேட்டையிலே நடைபெற்ற எம்.ஜி.ஆர்.சுடப்பட்ட வழக்கு விசாரணையையும் இந்த புத்தக ஆசிரியர்தான், ‘முரசொலி’, நம்நாடு என்ற தினப்பத்தரிகைகளிலே தொடர்ந்து வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்க பத்திரிகைத் துறை நீதிமன்றப் பணிகளாகும்.

மேற்கண்டவாறு வழக்கு நடவடிக்கைகளை, விசாரணைகளைப் பத்திரிகையில் கவனமாக வெளியிட்ட பொறுப்புணர்ச்சியால்தான், எந்தவித நீதிமன்ற அவமதிப்புச் சட்டங்களையும், Contempt of Courtயும் நான் சந்திக்கவில்லை.

எனவே, பத்திரிகை ஆசிரியர்களுக்கும், நிருபர்களுக்கும் அந்தக் கவன ஆற்றல் அமையவேண்டும் என்பது அவசியமாகும் என்பதாலே அந்த அனுபவத்தை இங்கே ஆதாரமாக்கினோம்.

நீதிமன்றக் குற்றங்கள்:

நீதிமன்றத்தையும், சட்டங்களையும், நீதிபதிகளின் அதிகாரங்களையும் வேண்டுமென்றே எந்தத் தனிப்பட்ட மனிதனும் இழிவுபடுத்தும் வகையில் செய்திகளை வெளியிடக்கூடாது. அவ்வாறு செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

எடுத்துக்காட்டாக, நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் வழக்கைப் பற்றிய தவறான செய்தியை வெளியிடக்கூடாது.அல்லது நடைபெறும் ஒரு வழக்கு இப்படித்தான் இருக்கவேண்டும் என்று புனைந்துரைக்கக் கூடாது.

நீதிபதியின் குணாதிசயங்கள், செயற்பாடுகள் பற்றிக் குறை காணக் கூடாது. சாட்சியம் கூறவந்தவர்களை விமர்சித்துப்