பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

பத்திரிக்கைகளைப் பாதுகாக்கும் ஃபெரோஸ் காந்தி சட்டம்!


சமுதாயத்தை, ஒழுக்கத்தைக் கெடுக்கக்கூடிய ஆபாசமான, அருவருப்பான, கீழ்த்தரமான செய்தி, கருத்துவடிவமுள்ள கட்டுரைகளை, படங்களை வெளியிடுவதைத் தடை செய்ய ஆபாச வெளியீட்டுத் தடைச்சட்டம் Opscene Prohibition Act கொண்டுவரப்பட்டது.

ஆபாசங்கள் விளக்கம்:

IPC, 292, 293, 294 பிரிவுகள் எந்தெந்த கருத்துக்கள் ஆபாசம் என்பதை விளக்குகின்றன. இந்த பிரிவுகளின்படி நாகரிகமற்ற செய்திகள், கீழ்த்தரமான உணர்வுகளைத் தூண்டும் கருத்துக்கள், எழுத்துக்கள், புகைப்படங்கள், ஓவியங்கள், திரைப்பட விளம்பரங்கள், நாடகங்கள் போன்றவை ஆபாசங்களாகும்.

ஒன்றை ஆபாசமாக வெளியிடுபவரின் நோக்கமும், வெளியிடும் முறையும் நினைக்கச் செய்கின்றன. எடுத்துக்காட்டாக, ஆண்-பெண் உறவுபற்றித் திருமணமானவர்களுக்குப் பயன்படும் வகையில், அறிவியல் அடிப்படை வழியில் வெளியிடலாம். ஆனால், வியாபார நோக்கத்தில் பத்திரிகைகள் விற்பனையை அதிகப்படுத்த பாலுணர்வில், தரக்குறைவான முறையில் வெளியிடுவதுதான் ஆபாசமாகும்.

தண்டனை என்ன?

ஆபாச வெளியீட்டுத் தடைச் சட்டத்தின்படி, ஆபாசமான வெளியீடுகளை அரசு பறிமுதல் செய்யலாம். ஆபாசமானவற்றை எழுதியவருக்கும், வெளியிட்டவருக்கும் மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை கொடுக்கலாம். அபராதம் விதிக்கலாம். ஆபாசமான பொருட்களை இறக்குமதி செய்வதை அரசு தடுக்கலாம். அதற்கும் தனிச் சட்டம் உள்ளது.

7. பதிப்புரிமைச் சட்டம்
(The Copyright Act)

அறிஞர்கள், சான்றோர்கள், ஆன்றோர்கள் சிந்தனைகளால் உருவான அறிவுப் படைப்புக்கள் அனைத்தும் அவரவர்களுக்கே உரிமையானது. அவற்றைப் பாதுகாத்து வைப்பதும் அறிவுடைமையாகும்.